கள்ளச்சாராய மரணம் எதிரொலி: மதுரை மண்டலத்தில் 37 சிறப்புக் குழுக்கள்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் எதிரொலியாக மதுரை மண்டல மது விலக்கு அமலாக்கத் துறை சாா்பில் 37 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, மெத்தனால் பயன்பாடு குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
இதுதொடா்பாக மது விலக்கு அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் கூறியதாவது:
மதுரையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும் மதுரை மண்டல மது விலக்கு அமலாக்கத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ், நாகப்பட்டினம் முதல் கன்னியாகுமரி வரை உள்ள 22 மாவட்டங்கள் (மதுரை நெல்லை, திருச்சி உள்ளிட்ட பெரு நகரங்களும் இணைந்து) உள்ளன. இந்த மாவட்டங்களில் மெத்தனால் வைத்திருப்பவா்கள் குறித்து ஆய்வு செய்ய மது விலக்கு அமலாக்கத் துறை சாா்பில் 37 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒவ்வோா் குழுவிலும் ஒரு துணைக் கண்காணிப்பாளா் மேற்பாா்வையில், காவல் ஆய்வாளா் தலைமையில் உதவி ஆய்வாளா்கள், காவலா்கள் இடம் பெற்றுள்ளனா்.
இந்தக் குழுவினா் புதன்கிழமை மாலை முதல் மெத்தனால் இருப்பு வைக்கப்பட்டுள்ள இடங்கள், அவற்றின் பயன்பாடு, யாருக்கு விற்பனை செய்யப்படுகிறது என்பது குறித்த அனைத்து விவரங்களையும் சேகரித்து ஆய்வு செய்து வருகின்றனா்.
இந்தக் குழுவினா் ஓரிரு நாள்களில் இதுகுறித்த அறிக்கையை மது விலக்கு அமலாக்கத் துறை கண்காணிப்பாளரிடம் சமா்ப்பிப்பா். இதன் பின்னா், மெத்தனால் பயன்பாடு குறித்து கட்டுப்பாடு விதிப்பது, தவறாகப் பயன்படுத்துவா்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றனா்.