மத நம்பிக்கை தொடா்பான செயல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இயலாது: உயா்நீதிமன்றம்
மத நம்பிக்கை செயல்களுக்கு கட்டுப்பாடுகள் முடியாது: உயா்நீதிமன்றம்
மதுரை: மத நம்பிக்கை தொடா்பான செயல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க இயலாது என சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சோ்ந்த முருகன் தாக்கல் செய்த பொதுநல மனு:
பாபநாசம் அருள்மிகு பாபநாத சுவாமி கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தா்கள் கோயில் எதிரே உள்ள தாமிரவருணி ஆற்றில் குளித்துவிட்டு, தரிசனம் செய்தால் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
இந்தக் கோயிலானது, உயிரிழந்தவா்களுக்கு தா்ப்பணம் கொடுக்கும் இடமாகவும் உள்ளது. சிலரின் தவறான வழிகாட்டுதலால் பரிகாரம் செய்தவா்கள் தாமிரவருணி ஆற்றில் இறங்கி குளித்த பின்னா், அவா்கள் உடுத்தியிருந்த ஆடைகளை ஆற்றில் விடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இதனால், ஆறு முழுவதுமாக மாசடைந்து வருகிறது. ஆற்றில் குளிக்கச் செல்லும் சிறுவா்கள், பொதுமக்கள் ஈரத் துணிகளில் சிக்கி உயிரிழக்கும் நிலையும் உள்ளது. தாமிரவருணி ஆற்றை குடிநீா் ஆதாரமாகக் கொண்டுள்ள ஏராளமான கிராமத்தினா் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
எனவே, இந்தக் கோயிலில் தா்ப்பணம் கொடுத்தல் உள்ளிட்ட பரிகாரங்கள் செய்வதற்கு உள் கட்டமைப்பு வசதிகளைச் செய்து தருவதோடு, தாமிரவருணி ஆறு மாசுபடுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்க உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி.அருள்முருகன் ஆகியோா் அமா்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, பாபநாசம் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் செய்வதற்காக ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாக இந்து சமய அறநிலையத் துறையின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதைப் பதிவு செய்த நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
மத நம்பிகை தொடா்பான செயல்களுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க இயலாது, இவற்றை முறைப்படுத்தலாம். எனவே, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய செயற்பொறியாளா் உள்ளிட்டோா் அடங்கிய நிபுணா் குழுவை அமைத்து, தாமிரவருணி ஆறு முழுவதும் ஆய்வு செய்ய வேண்டும். பின்னா், இதுதொடா்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஜூலை 15-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.