செய்யறிவு உதவிக்காகவே தவிர நீதித்துறை நெறிமுறையை மாற்ற இயலாது: உச்ச நீதிமன்ற நீதிபதி!
நீதித்துறையில் செயற்கை நுண்ணறிவு பற்றி..
செயற்கை நுண்ணறிவு என்பது உதவிக்காவே தவிர நீதித்துறையின் நெறிமுறைகளை மாற்ற இயலாது என உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் கூறினார்.
ஹைரதாபாத்தில் மாநாடு ஒன்றில் உரையாற்றிய நீதிபதி விக்ரம் கூறுகையில்,
தொழில்நுட்பம் ஒரு குறிப்பைத் தருவதற்கு உதவக்கூடுமே தவிர, அதற்குச் சட்டத்தை உருவாக்க அனுமதிக்க இயலாது. அதே நேரத்தில், செயற்கை நுண்ணறிவின் தவறான பயன்பாடு, நீதித்துறை அமைப்பை அதனுடன் முழுமையாக ஈடுபட மறுக்கும் எதிர் தீவிரத்திற்கு இட்டுச் செல்ல முடியாது என்றார்.
உச்ச நீதிமன்றத்தில் கூட, இல்லாத மேற்கோள்கள் மற்றும் அதிகாரப்பூர்வத் தரவுகளைக் குறிப்பிடுவது உள்ளிட்ட வகையில், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்கள் கவனக்குறைவாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகள் குறித்துக் கவலை தெரிவித்த நீதிபதி நாத், "தவறான மேற்கோள்கள் என்பவை வெறும் தொழில்நுட்பப் பிழைகள் மட்டுமல்ல, அவை சட்டரீதியான வாதங்களின் நேர்மையையும், நீதி வழங்கும் செயல்முறையின் நம்பகத்தன்மையையும் அடியோடு பாதிக்கின்றன என்று கூறினார்.
என்னதான் இருந்தாலும் ஏஐ டூல் என்பது ஒரு கருவியாகத் தான் பயன்படுத்த முடியும். ஆனால், வழக்குரைஞரின் பயிற்சி பெற்ற மனதையோ, நீதிமன்ற அதிகாரியின் நெறிமுறைப் பொறுப்பையோ அல்லது ஒரு நீதிபதிக்குத் தேவையான ஒழுக்கமான தீர்ப்பையோ மாற்ற இயலாது.
இந்த (டூல்) கருவிகளை எவ்வாறு திறமையாகவும், கவனமாகவும், அவற்றின் வரம்புகள் பற்றிய முழு விழிப்புணர்வுடனும் பயன்படுத்துவது என்பதை நாம் கற்றுக்கொள்ள வேண்டும். எனவே, தொழில்நுட்பம் அணுகலை விரிவுபடுத்த முடியும், ஆனால் அதை ஆழப்படுத்த முடியாது.
மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் கருவிகள் சட்டப் பணிகளுக்கு உதவ முடியும், ஆனால் அவை புதிய வடிவிலான கவனக்குறைவையும் உருவாக்க முடியும். அதேசமயம் குற்றங்களுக்குப் பதிலளிக்க உதவும், ஆனால், அதே நேரத்தில் புதிய குற்றங்கள் செய்யவும் வழிவகுக்கும் என உச்ச நீதிமன்ற நீதிபதி கூறினார்.
நாம் வாழும் இக்காலகட்டத்தின் முரண்பாடு இது, ஆகவே, அந்த முரண்பாட்டிற்குத் திறமையுடன் பதிலளிப்பது நமது நிறுவனங்களின் பொறுப்பாகும்.
தொழில்நுட்பம் புதிதாக இருக்கிறது என்பதற்காக நாம் அதை நிராகரித்துவிடக் கூடாது.
அது செயல்திறன் மிக்கதாக இருக்கிறது என்பதற்காக நாம் அதைக் கண்மூடித்தனமாக ஏற்றுக்கொண்டுவிடவும் கூடாது.
நீதித்துறையின் எதிர்காலம் என்பது, நடைமுறைகளை வெறும் கணினிமயமாக்குவதன் மூலம் மட்டும் பாதுகாக்கப்பட்டுவிடாது. தொழில்நுட்பமானது சட்ட அமைப்பின் அடிப்படை லட்சியங்களுடன் உறுதியாகப் பிணைக்கப்பட்டிருப்பதை உறுதி செய்வதன் மூலமே அதன் எதிர்காலம் பாதுகாக்கப்படும்.
சட்டத்தின் ஆட்சி என்பது, பயன்படுத்தப்படும் கருவிகளின் அதிநவீனத் தன்மையைச் சார்ந்திருப்பதில்லை, நிறுவனங்களின் உறுதித்தன்மையையும், அவற்றில் பணியாற்றுவோரின் நேர்மையையுமே சார்ந்திருக்கிறது என்று அவர் கூறினார்.
மற்றொரு உச்ச நீதிமன்ற நீதிபதியான சதீஷ் சந்திர சர்மா மற்றும் தெலங்கானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியான அபரேஷ் குமார் சிங் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றினர்.