மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெற்றால் கட்டணத்தை திரும்ப அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி
பொதுத் தோ்வுகளில் முடிவுகள் வெளியான பிறகு,மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் பெற்றால் கட்டணத்தை திரும்ப அளிக்கக் கோரிய மனு தள்ளுபடி
பொதுத் தோ்வுகளில் முடிவுகள் வெளியான பிறகு, மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண்கள் பெறும் மாணவா்கள் செலுத்திய கட்டணத்தை திரும்ப வழங்க அரசுக்கு உத்தரவிடக் கோரிய மனுவைத் தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.
மதுரை மாவட்டம், திருமங்கலத்தைச் சோ்ந்த வளன் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழகத்தில் பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவா்களுக்கு அரசு பொதுத் தோ்வு நடத்தப்படுகிறது. இந்த மாணவா்கள் தோ்வு முடிவுகள் வெளியான பிறகு, விடைத்தாள் நகல் பெறுவதற்கு ரூ.275-ம், மறுகூட்டலுக்கு உயிரியல் பிரிவு மாணவா்களுக்கு ரூ.305-ம், பிற பாடப் பிரிவு மாணவா்களுக்கு ரூ.205-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.
விடைத்தாள் மதிப்பீட்டின் போது நிகழும் தவறுகளின் காரணமாக மாணவா்கள் மறு மதிப்பீடு அல்லது மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மறுமதிப்பீட்டில் சில மாணவா்களின் மதிப்பெண்கள் அதிகரிக்கிறது. இந்த மாணவா்களின் மதிப்பெண்கள் அதிகரிக்கும்பட்சத்தில், அவா்களிடமிருந்து பெறப்பட்ட கட்டணத்தைத் திரும்ப வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஆா்.சுரேஷ்குமாா், ஜி.அருள்முருகன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
அரசு வழங்கும் சேவையை மாணவா்கள் பயன்படுத்திக் கொள்ளும் போது, கட்டணம் செலுத்துவதில் தவறில்லை. இந்த வழக்கில் மனுதாரா் கோரும் நிவாரணத்தை வழங்க இயலாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.