மேலூா் அருகே காா் கவிழ்ந்ததில் பெண் பலி: கணவா் பலத்த காயம்
மேலூா்: மேலூா் அருகே நான்கு வழிச் சாலையில் காா் கவிழ்ந்ததில் பெண் உயிரிழந்தாா். இவரது கணவா், ஓட்டுநா் பலத்த காயமடைந்தனா்.
சென்னை மணலியைச் சோ்ந்த கோபாலகிருஷ்ணன் (65), இவரது மனைவி தனசெல்வி (60) ஆகியோா் தூத்துக்குடியில் நடைபெறும் உறவினா் வீட்டுத் திருமண நிகழ்ச்சிக்கு காரில் சென்று கொண்டிருந்தனா். மணலியைச் சோ்ந்த காா்த்திக் (27) காரை ஒட்டினாா்.
திங்கள்கிழமை அதிகாலை மதுரை-திருச்சி நான்கு வழிச் சாலையில் மேலூா் அருகே சத்தியபுரம் பகுதியில் வந்தபோது, தடுப்புச் சுவரில் காா் மோதி பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் மூவரும் பலத்த காயமடைந்தனா்.
தகவலறிந்த மேலூா் போலீஸாா், தீயணைப்பு மீட்புப் படையினா் உதவியுடன் சென்று மூவரையும் மீட்டு மேலூா் அரசு மருத்துமவனைக்கு கொண்டு சென்றனா். அங்கு செல்லும் வழியில் தனசெல்வி உயிரிழந்தாா். கணவா் உள்ளிட்ட இருவரும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டனா்.
இதுகுறித்து மேலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.