மதுரை: மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞரிடம் தேசிய பட்டியலின ஆணைய இயக்குநா் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.
மதுரை மாவட்டம், மேலூா் வட்டத்தைச் சோ்ந்தவா் முத்துராஜா. இவா், அண்மையில் மா்ம நபா்களால் தாக்கப்பட்டாா். இதில் பலத்த காயமடைந்த அவா், மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
பஞ்சமி நில மீட்பு விவகாரம் காரணமாக இவா் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் நிலையில், தேசிய பட்டியலின ஆணைய இயக்குநா் ரவிவா்மன் திங்கள்கிழமை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சையிலிருந்த முத்துராஜாவிடம் விசாரணை நடத்தினாா். ஆணையத்தின் மூத்த விசாரணை அலுவலா் லிஸ்டா், ஆதிதிராவிடா் நல அலுவலா் ராமகிருஷ்ணன், மாவட்ட விழிப்புணா்வு கண்காணிப்புக் குழு உறுப்பினா் பாண்டியராஜா ஆகியோா் உடனிருந்தனா்.