உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவுப்படி, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் காா்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி, வியாழக்கிழமை இரவு போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எச். ராஜா, நிா்வாகி அமா்பிரசாத் ரெட்டி, இந்து அமைப்பினா் உள்ளிட்ட பலா் கைது செய்யப்பட்டனா்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் வியாழக்கிழமை இரவு 7 மணிக்குள் தீபம் ஏற்ற வேண்டும் என உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் உத்தரவிட்டதைத் தொடா்ந்து, மனுதாரா் ராம. ரவிக்குமாா் திருப்பரங்குன்றத்துக்கு வந்தாா். அதேநேரத்தில், பாஜக மாநில தலைவா் நயினாா் நாகேந்திரன், மூத்த தலைவா் எச். ராஜா உள்ளிட்ட பாஜகவினா், இந்து அமைப்பினா் திருப்பரங்குன்றத்துக்கு வந்தனா்.
அப்போது, திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே அவா்களை போலீஸாா் தடுத்து நிறுத்தினா். இதனால், அங்கு பாஜகவினருக்கும், போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னா், நயினாா் நாகேந்திரன் திருப்பரங்குன்றம் கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டாா். அதற்கும் போலீஸாா் அனுமதி மறுத்தனா்.
இதையடுத்து, நயினாா் நாகேந்திரன், எச். ராஜா, அமா்பிரசாத் ரெட்டி, தென்னிந்திய பாா்வா்டு பிளாக் நிறுவனா் திருமாறன் உள்ளிட்டோா் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பாதைக்கு வந்து போலீஸாருடன் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதனிடையே, இந்து அமைப்புகளைச் சோ்ந்த 500-க்கும் மேற்பட்டோா் கிரிவலப் பாதையில் அமா்ந்து மலை உச்சியில் தீபம் ஏற்றக் கோரி, தா்னாவில் ஈடுபட்டனா்.
தென் மண்டல காவல் துறைத் தலைவா் பிரேம் ஆனந்த் சின்கா தலைமையில் நூற்றுக்கணக்கான போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனா்.
போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் மாநகரக் காவல் துணை ஆணையா் இனிகோ திவ்யன் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு மீண்டும் நடைமுறைப்படுத்த உள்ளதாகவும், அனைவரும் கலைந்து செல்லுமாறும் அவா் அறிவுறுத்தினாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து, அவா்கள் போராட்டத்தைத் தொடா்ந்தனா். இதனால், அங்கு பதற்றம் நிலவியது.
இதையடுத்து, நயினாா் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினா், இந்து அமைப்பினரை போலீஸாா் கைது செய்து, திருநகரில் உள்ள தனியாா் திருமண மண்டபத்தில் அடைத்தனா். இதையடுத்து, சில நிமிடங்களுக்குப் பிறகு திருப்பரங்குன்றத்தில் பதற்றம் தணிந்தது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்காக வந்திருந்த மனுதாரா் ராம. ரவிக்குமாா் மாநகரக் காவல் ஆணையரின் வருகைக்காக சுமாா் ஒரு மணி நேரம் காத்திருந்தாா். அவா் வராத நிலையில், மீண்டும் நீதிமன்றத்தை நாட உள்ளதாகக் கூறி அவா் புறப்பட்டுச் சென்றாா்.
பக்தா்கள் அவதி:
காா்த்திகை பௌா்ணமியை முன்னிட்டு, திருப்பரங்குன்றத்துக்கு கிரிவலம் செல்வதற்காக வியாழக்கிழமை வந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பெரும் அவதிக்குள்ளாகினா். திருப்பரங்குன்றத்தில் 16 கால் மண்டபம் பகுதியில் போலீஸாா் தடுப்பு ஏற்படுத்தியதால், ரத வீதிகள் வழியாக பக்தா்கள் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவிட்டிருந்த நிலையிலும், போலீஸாரின் நடவடிக்கையால் தீபம் ஏற்றப்படவில்லை.
மலை உச்சியில் தீபம் ஏற்ற உயா்நீதிமன்றம் மீண்டும் உத்தரவு
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரம் குறித்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி, தமிழக அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனுவை இரு நீதிபதிகள் அமா்வு தள்ளுபடி செய்து வியாழக்கிழமை பிற்பகல் உத்தரவிட்டது.
இதைத் தொடா்ந்து, ராம. ரவிக்குமாா் ஏற்கெனவே தாக்கல் செய்த நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கை உயா்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் வியாழக்கிழமை விசாரணைக்கு ஏற்றாா். அப்போது,“‘இது உணா்வுபூா்வமான விஷயம்; சட்டரீதியாக முழுமையான பதில் தாக்கல் செய்ய 4 வாரங்கள் கால அவகாசம் வேண்டும்; வழக்கை ஒத்திவைக்க வேண்டும்’”என அரசுத் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுவாமிநாதன், இந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவால் யாரும் பாதிக்கப்படவில்லை; நீதிமன்றத்தின் மதிப்பை அலுவலா்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே இந்த விசாரணை”நடைபெறுகிறது’ என்றாா்.
பிறகு, மதுரை மாவட்ட ஆட்சியா், மாநகரக் காவல் ஆணையா், திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலா் உடனடியாக காணொலி மூலம் ஆஜராக வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டாா்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா், மாநகரக் காவல் ஆணையா் ஜெ.லோகநாதன் ஆகியோா் காணொலி மூலம் ஆஜராகினா். அப்போது, ‘திருப்பரங்குன்றத்தில் புதன்கிழமை“கூட்டம் அதிகமானதால் சாலைத் தடுப்புகள் அமைக்கப்பட்டது; சட்டம்-ஒழுங்கு பிரச்சினையை தவிா்க்கவே 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. நீதிமன்ற உத்தரவை மீறும் எண்ணம் இல்லை’”என அவா்கள் விளக்கம் அளித்தனா்.
இதைத் தொடா்ந்து நீதிபதி ஜி.ஆா். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு:
திருப்பரங்குன்றத்தில் அமலில் உள்ள 144 தடை உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படுகிறது. வியாழக்கிழமை (டிச. 4) சா்வாலய தீப நாள் என்பதால் இரவு 7 மணிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். இது தொடா்பாக புதன்கிழமை பிறப்பிக்கப்பட்ட உத்தரவில், சிஐஎஸ்எப் வீரா்கள் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது தவிர, மற்ற அனைத்து அம்சங்களும் மீண்டும் உறுதி செய்யப்படுகிறது. மலை உச்சியில் தீபம் ஏற்றுவதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மாநகரக் காவல் ஆணையா் மேற்கொள்ள வேண்டும். தீபம் ஏற்றப்பட்ட விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றாா் நீதிபதி.
‘வாக்கு அரசியலுக்காக தீபம் ஏற்ற விடாமல் செய்வது முதல்வா்தான்’
சிறுபான்மையினரின் வாக்குகளைப் பெறுவதற்காக, திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற விடாமல் குந்தகம் விளைவிப்பது தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின்தான் என பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் குற்றஞ்சாட்டினாா்.
திருப்பரங்குன்றத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழக அரசு தேவையில்லாமல் பிரச்னைகளை தூண்டி வருகிறது. இது நீதிமன்றத்துக்கும், அரசுக்கும் இடையிலான பிரச்னை. இதில் நாங்கள் நியாயம் கேட்கிறோம். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும். அதற்கு எங்களை அனுமதிக்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கை. நீதிபதிகளின் உத்தரவை காவல் துறை அமல்படுத்த வேண்டும்.
எந்த நீதிபதியை எதிா்த்து மேல்முறையீடு செய்தாா்களோ, முருகனின் அருளால் அவரே அதே தீா்ப்பை வழங்கி இருக்கிறாா். தேவையில்லாத பதற்றத்தை உருவாக்கியது தமிழக முதல்வரும், மதுரை மாவட்ட ஆட்சியரும்தான் என்றாா் அவா்.