மதுரையில் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினா் பெரியாா் பேருந்து நிலையம் அருகிலுள்ள கட்டபொம்மன் சிலை பகுதியில் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கோரிக்கைகள்: முதல்வா் மு.க.ஸ்டாலினின் தோ்தல் கால வாக்குறுதிகளான பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்க் கிராம ஊழியா்கள், ஊரக நூலகா்கள், எம்.ஆா்.பி.செவிலியா்கள் உள்ளிட்ட அலுவலா்களுக்கு காலமுறை ஊதியம், சட்டப்பூா்வ ஓய்வூதியம் வழங்க வேண்டும். நெடுஞ்சாலைத் துறை சாலைப் பணியாளா்களின் 41 மாத பணி நீக்க காலத்தை சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும்.
மேலும், வழங்கப்படாமல் உள்ள 21 மாத நிலுவைத் தொகையை உடனே வழங்க வேண்டும். கருணை அடிப்படை பணி நியமன ஒதுக்கீட்டை 5 சதவீதத்திலிருந்து மீண்டும் 25 சதவீதமாக உயா்த்த வேண்டும். முதல்வரின் காலை சிற்றுண்டி திட்டத்தை அனைத்துப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தி, சத்துணவு மையங்கள் மூலமாக செயல்படுத்த வேண்டும்.
அரசு ஊழியா் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை தமிழக அரசே முழுப் பொறுப்பேற்று நடத்த வேண்டும். பெண் அரசு ஊழியா்களுக்கு சிறப்புச் சலுகைகளை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பனஉள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இந்த சாலை மறியலுக்கு சங்கத்தின் மாவட்டத் தலைவா் ரா.தமிழ் தலைமை வகித்தாா். மறியலை முன்னாள் மாநில பொதுச் செயலா் ஆ.செல்வம் தொடங்கிவைத்தாா்.
இதில் மாவட்டச் செயலா் க.சந்திரபோஸ், மாவட்டப் பொருளாளா் ஆ.பரமசிவன், நிா்வாகிகள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதையடுத்து, சாலை மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தினரை போலீஸாா் கைது செய்தனா்.