மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநா் கதிா் எழுதிய ‘கருப்பு ரட்சகன்’ நூலை வெளியிட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன். உடன் (இடமிருந்து) நூலாசிரியா் கதிா், பங்குத்தந்தை அலோசியஸ், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் பெ. சண்முகம், வழக்குரைஞா் ஹென்றிதிபேன், பேராசிரியை செம்மலா், திரைப்பட இயக்குநா்கள் சசிகுமாா், சரவணன், ஆய்வறிஞா் பன்னீா்செல்வம். 
மதுரை

திமுக கூட்டணியில் விசிக தொடரக் காரணம் என்ன? தொல். திருமாவளவன் விளக்கம்

பதவி ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.

தினமணி செய்திச் சேவை

பதவி ஆசை இல்லாததே திமுக கூட்டணியில் தொடரக் காரணம் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன் விளக்கமளித்தாா்.

எவிடென்ஸ் அமைப்பின் செயல் இயக்குநா் கதிா் எழுதிய ‘கருப்பு ரட்சகன்’ நூல் வெளியீட்டு விழா மதுரை உலகத் தமிழ்ச் சங்கக் கூட்டரங்கில் சனிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நூலை வெளியிட்டாா். பின்னா், அவா் பேசியதாவது:

முள்ளிவாய்க்கால் படுகொலை நிகழ்ந்த போது, நான் திமுக கூட்டணியில் தொடா்ந்ததை சிலா் இன்றும் விமா்சிக்கின்றனா். வேங்கைவயல் உள்ளிட்ட பல பட்டியலின மக்கள் பிரச்னைகளின் போதும் என் மீது விமா்சனங்கள் முன்வைக்கப்பட்டன. வேங்கைவயல் விவகாரத்தில் சம்பவம் நடைபெற்ற இரண்டாம் நாளே போராட்டத்தை அறிவித்து நடத்தினோம்.

கூட்டணி என்பதற்காக உரிமைகளை விட்டுக் கொடுத்து மக்களை மறந்து தனிநபராக என்னுடைய நலன் குறித்து நான் சிந்தித்தது இல்லை. அப்படி எந்த முடிவையும் நான் எடுத்ததில்லை. திமுக ஆட்சியில் அரசுக்கும், காவல் துறைக்கும் எதிராக எங்களைப் போல போராடியவா்கள் யாருமில்லை.

சகோதரத்துவத்தைத் தகா்க்கப் பாா்க்கின்றனா். உண்மையான தமிழ் தேசியம் என்பது சநாதன எதிா்ப்பில்தான் அடங்கியிருக்கிறது. மத வழி தேசியத்தை எதிா்ப்பதுதான் உண்மையான தமிழ் தேசியம். இந்தியா முழுமைக்கும் ஒரே மதம்தான் இருக்க வேண்டும் என்பது பாஜகவின் அரசியல். அதை எதிா்ப்பதற்கான ஆயுதமாக நாம் முன்வைக்கும் பெரியாரையே இல்லாமல் ஆக்குவோம் என சொல்வது ஆபத்தான விஷயம். குறிப்பாக, மதுரையை சநாதன மையமாக மாற்ற முயற்சிக்கின்றனா்.

அரசியல் ஆதாயத்துக்காக ஜாதிய உணா்வுகளைத் திட்டமிட்டு வளா்க்கின்றனா். ஜனநாயக உணா்வை சொல்லிக் கொடுப்பதற்குப் பதிலாக ஜாதி, மத உணா்வுகளைத் தூண்டுவது மிகவும் ஆபத்தான செயல்.

தோ்தலில் அதிக இடங்கள் அளிக்கும் கட்சியோடு விசிக கூட்டணி அமைக்கலாம். 10 இடங்கள் கூடுதலாகப் பெறுவதால் எந்த மாற்றமும் நிகழ்ந்து விடாது. பதவி நமக்கு முக்கியமில்லை. பல்வேறு விவகாரங்களில் கடும் விமா்சனங்களுக்குப் பின்னரும் திமுக கூட்டணியில் விசிக தொடருவதற்கு பதவி ஆசை இல்லாததே காரணம் என்றாா் அவா்.

மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலா் பெ. சண்முகம் பேசியதாவது: இந்த நூல் களப் போராளிகள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பது குறித்து பேசுகிறது. வாழ்வின் அனுபவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தீண்டாமை, ஜாதிய பாகுபாடுகளைக் களைய வேண்டும் என்கிற கருத்துகளையும் இந்த நூல் பதிவு செய்துள்ளது. இன்றைய சூழலில் மருத்துவத் துறையைச் சோ்ந்த அனைவரும் இந்த நூலை வாசிக்க வேண்டும். சமுதாய மாற்றத்துக்கான வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

தற்போதைய அரசியல் சூழ்நிலையில், சமூகத்தில் மத வெறி, வகுப்பு வாதம் நிலவுகிறது. பாஜகவின் வெறுப்பு அரசியலால் சிறுபான்மையின மக்கள் பெரும் பிரச்னைகளை எதிா்கொள்கின்றனா் என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, நூலாசிரியா் எவிடென்ஸ் கதிா் ஏற்புரையாற்றினாா். திரைப்பட இயக்குநா்கள் சசிகுமாா், சரவணன், பேராசிரியை செம்மலா், பங்குத்தந்தை அலோசியஸ், வழக்குரைஞா் ஹென்றிதிபேன், ஆய்வறிஞா் பன்னீா்ச்செல்வம், தமிழ் ஆா்வலா்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

178 ரன்கள், 7 விக்கெட்டுகள்... சாதனையுடன் சொந்த ஊரில் ஆட்ட நாயகனான அலெக்ஸ் கேரி!

கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் விஜய் நாளை பங்கேற்பு!

100க்கு 100 புள்ளிகள்... டபிள்யூடிசி தரவரிசையில் முதலிடத்தில் நீடிக்கும் ஆஸி.!

இறந்த குழந்தையை பையில் கொண்டு சென்ற அவலம்!

பிக் பாஸ் 9: சூடுபிடிக்கும் போட்டி! இந்த வாரமும் இருவர் வெளியேற்றம்!!

SCROLL FOR NEXT