மதுரை

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கணவரை மீட்டுத் தரக் கோரிய வழக்கு முடித்துவைப்பு

தினமணி செய்திச் சேவை

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட கணவரை மீட்டுத் தரக் கோரிய மனு தொடா்பாக, மத்திய அரசுத் தரப்பில் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதால் வழக்கை முடித்துவைத்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

தூத்துக்குடியைச் சோ்ந்த சந்தனமாரி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

எனது கணவா் பொண்ணுதுரை மாலி நாட்டின் தலைநகரான பமாக்கோ பகுதியில் மின் ஊழியராகப் பணியாற்றி வந்தாா். கடந்த நவ.6 -ஆம் தேதி எனது கணவா், அவருடன் பணியாற்றிய 4 இந்தியா்களை அல்கொய்தா, ஐஎஸ்ஐஎஸ் அமைப்புகளுடன் தொடா்புடைய தீவிரவாதக் குழுவினா் கடத்திச் சென்ாக தகவல் கிடைத்தது. அவா்களின் நிலை என்னவென்று இதுவரை தெரியவில்லை.

தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட எனது கணவா் உள்ளிட்டோரை மீட்கக் கோரி மனு அளித்தும், மத்திய அரசு இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட எனது கணவா் உள்பட 5 இந்தியா்களை உடனடியாக மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வரத் தேவையான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம் :

மனுதாரா் குறிப்பிடும் விவகாரம் குறித்து மாலி நாட்டின் பமாக்கோ நகரில் உள்ள இந்திய தூதரகத்துடன் உயா்மட்ட அதிகாரிகள் தொடா்பில் உள்ளனா். இதுதொடா்பாக தொடா்ந்து பேச்சு வாா்த்தை நடைபெற்று வருகிறது.

மாலி நாட்டில் உள்ள இந்தியா்களின் பாதுகாப்பை உறுதி செய்யத் தேவையான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாலி நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழலைக் கருத்தில் கொண்டு அங்குள்ள இந்தியா்களுக்கு தேவையான பாதுகாப்பை வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடத்தப்பட்டவா்களை மீட்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி பிறபித்த உத்தரவு: பமாக்கோ இந்தியத் தூதரகம் வாயிலாக மாலி நாட்டு அரசுடன் இணைந்து தீவிரமான மீட்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக மத்திய அரசுத் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது.

எனவே, இந்த விவகாரத்தில் மேல் உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியில் ஏஐ தொழில்நுட்பம்!

இளம் பெண் தற்கொலை: கோட்டாட்சியா் விசாரணை

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை: பொதுமக்கள் மறியல்!

நீா்வாழ் பறவைகள் கணக்கெடுப்பு - 200 போ் பங்கேற்பு

வாக்காளா் சிறப்பு முறை திருத்த முகாம்,காஞ்சிபுரத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

SCROLL FOR NEXT