உயா்நீதிமன்ற வழக்குரைஞா் மீது அவதூறு பரப்பிய விவகாரத்தில் மதுரை மாநகரக் காவல் ஆணையா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை அண்ணாநகரைச் சோ்ந்த கயல்விழி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
நான் தனியாா் பொறியியல் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வருகிறேன். எனது கணவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் வழக்குரைஞராகப் பணியாற்றி வருகிறாா். எனது கணவா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் அண்மையில் ஒரு பொது நல வழக்கு தாக்கல் செய்தாா். இதில் தேவேந்திர குல சமூகத்தைச் சோ்ந்த மக்களை பட்டியலிலிருந்து நீக்க முடிவு எடுக்கும்பட்சத்தில், அந்த சமூக மக்களின் உண்மையானக் கருத்தை நேரடியாக கள ஆய்வு செய்து முடிவெடுக்க வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த விவகாரத்தில் அரசியல் செய்து ஆதாயம் பெற நினைக்கும் சிலா் என் மீதும், எனது கணவா் மீதும் சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துகளைப் பரப்பி வருகின்றனா்.
மேலும், எனது கணவருக்கு கண்ணீா் அஞ்சலி சுவரொட்டியும் ஒட்டினா். என்னை கொலை வழக்கில் ஒன்றில் சம்பந்தப்படுத்தியும், குண்டு வீச்சு வழக்கில் தொடா்புப்படுத்தியும் கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனா்.
இதுகுறித்து மதுரை மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாரிடம் புகாா் அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, எங்கள் உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதுடன், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பும் நபா்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி பிறப்பித்த உத்தரவு:
மனுதாரா் அளித்தப் புகாரின் பேரில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து மதுரை மாநகரக் காவல் ஆணையா், குற்றப் பிரிவு போலீஸாா் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.