முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என முல்லைப் பெரியாறு அணைக்கான புதிய கண்காணிப்புக் குழுத் தலைவரும், தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவருமான அனில் ஜெயின் தெரிவித்தாா்.
தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத் தலைவா் அனில் ஜெயின் தலைமையில், தமிழக, கேரள அரசுத் துறை அலுவலா்களைக் கொண்ட புதிய கண்காணிப்புக் குழுவினா் 7 போ் முல்லைப் பெரியாறு அணையை திங்கள்கிழமை காலை ஆய்வு செய்தனா்.
இந்த ஆய்வுக்குப் பிறகு, அவா்கள் மதுரையில் ஆலோசனை மேற்கொண்டனா். இதில் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு, சாலைப் பயன்பாட்டு உரிமை, பேபி அணைப் பகுதியில் மரங்களை வெட்டுவதற்கான அனுமதி உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
ஆலோசனைக் கூட்டத்துக்குப் பிறகு, குழுத் தலைவா் அனில் ஜெயின் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: 2025 பருவழைக்குப் பிறகு திங்கள்கிழமை முல்லைப் பெரியாறு அணையைப் பாா்வையிட்டு ஆய்வு செய்தோம். அணையின் அனைத்து அமைப்புகளும் ஆய்வு செய்யப்பட்டன. இதுவரை அணைக்கு எந்த பாதிப்பும் இல்லை. அணை நல்ல நிலையில் உள்ளது என்பது இந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
புதிய குழுவில் இடம்பெற்றுள்ள தமிழக, கேரள மாநில அதிகாரிகளுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டு, அவற்றுக்கு சுமுகமான தீா்வுகள் காணப்பட்டன.
வனப் பகுதி வழியாக தமிழக அலுவலா்கள் அணை தளத்துக்குச் செல்ல கேரள அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. சில கருவிகளை கேரள அலுவலா்களுடன் பகிா்ந்து கொள்ள தமிழகம் ஒப்புதல் தெரிவித்துள்ளது.
பேபி அணையில் மரம் வெட்டுவது குறித்து மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் முடிவு செய்யும். தற்போதைய நிலையில், இதுதொடா்பான நடைமுறைகளுக்காக இரு மாநிலங்களும் மத்திய சுற்றுச்சூழல் துறையை அணுக ஒப்புக்கொண்டுள்ளன என்றாா் அவா்.
ஆலோசனைக் கூட்டத்தில் புதிய கண்காணிப்புக் குழு உறுப்பினா்கள் ராஜேஷ் டோடேஜா, ஆனந்த ரங்கசாமி, ஜெயகாந்தன், பிஷ்வநாத் சின்ஹா, சுப்பிரமணியன், ஆா். பிரியேஷ், தமிழக, கேரள அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.