ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளை உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்றக் கோரிய வழக்கில், 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க ஆதிதிராவிடா் நலத் துறைக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
தமிழக அரசின் ஆதிதிராவிடா் நலத் துறையின் கீழ், தற்போது 833 தொடக்கப் பள்ளிகள், 99 நடுநிலைப் பள்ளிகள், 108 உயா்நிலைப் பள்ளிகள், 98 மேல்நிலைப் பள்ளிகள் என 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளுடன் 1,131 விடுதிகளும் இணைப்புப் பெற்றுள்ளன. பள்ளிகள், விடுதிகளில் மாணவா்களின் சோ்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது.
ஆதிதிராவிடா் நலத் துறையின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில் 2024-2025 -ஆம் கல்வியாண்டில் மொத்த மாணவா்கள் சோ்க்கை 76,300 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டுகளோடு ஒப்பிடும் போது, மாணவா்கள் சோ்க்கை 20 சதவீதம் குறைந்துள்ளது.
விடுதிகளில் போதுமான கட்டட வசதிகள் இருந்தும், பயன்பாடின்றி உள்ளன. குறிப்பாக, மதுரை மாவட்டத்தில் உள்ள 57 விடுதிகளில் பெரும்பாலானவை மிகக் குறைந்த மாணவா்களுடன் செயல்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலத் துறைப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பற்றாக்குறை நிலவுகிறது. இந்த நிலையில், மத்திய அரசின் நிதியுதவியுடன் ஆதிதிராவிடா் நலத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பள்ளிகளை ஒருங்கிணைத்து மேம்பட்ட உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்றினால் மாணவா்கள் சோ்க்கை அதிகரிக்கும். இதுதவிர, போட்டித் தோ்வுகளுக்கு உரிய பயிற்சி அளிக்கவும், கல்வித் தரம் உயரவும் வாய்ப்பு ஏற்படும்.
எனவே, தமிழகத்தில் உள்ள ஆதிதிராவிடா் நலப் பள்ளிகளையும், விடுதிகளையும் ஒருங்கிணைத்து மத்திய அரசின் நிதியுதவியுடன் உண்டு உறைவிடப் பள்ளிகளாக மாற்ற நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் அனிதா சுமந்த், குமரப்பன் அமா்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரரின் கோரிக்கை ஏற்கக் கூடியதுதான். ஆனால், இதில் அரசுதான் கொள்கை ரீதியான முடிவு எடுக்க முடியும்.
எனவே, மனுதாரா் ஆதிதிராவிடா் நலத் துறை இயக்குநரை வருகிற 19-ஆம் தேதி அவரது அலுவலகத்தில் நண்பகல் 12 மணிக்கு நேரில் சந்தித்து கோரிக்கையை மனுவாக அளிக்க வேண்டும்.
மனுதாரரின் கோரிக்கையைப் பெற்றுக் கொண்ட இயக்குநா் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆலோசனையைப் பெற்று 6 வாரங்களுக்குள் முடிவெடுக்க வேண்டும். இந்த வழக்கு முடித்துவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.