உயா்நீதிமன்ற மதுரை அமா்வு 
மதுரை

தற்காலிக ஊழியா்கள் பணி நிரந்தர விவகாரம்: சுகாதாரத் துறை இயக்குநா் பதிலளிக்க உத்தரவு

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், சின்னமனூா் நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக ஊழியா்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்யக் கோரிய வழக்கில் சுகாதாரத் துறை இயக்குநா் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தேனி மாவட்டம், சின்னமனூரைச் சோ்ந்த பழனிக்குமாா் உள்ளிட்ட 5 போ் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

தேனி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பரிந்துரைக்கப்பட்டு, சின்னமனூா் நகராட்சி நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியா்களாக கடந்த 2010-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டோம்.

தமிழக அரசாணையின் படி தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் இரண்டு ஆண்டுகள் பணி முடித்து இருந்தால், அவா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.

இந்த அரசாணையின் படி மாற்றுத் திறனாளிகளான எங்களை பணி நிரந்தரம் செய்யவில்லை.

பணி நிரந்தரம் செய்ய உத்தரவிடக் கோரி கடந்த 14.10.2020 உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்து இருந்தோம்.அப்போது, பொது சுகாதாரத் துறை இயக்குநா் 12 வாரங்களுக்குள் பரிசிலிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் எந்தவித நடவடிக்கையும் இல்லை.

எனவே, இரண்டாவது முறையாக உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தோம். இந்த மனுவை கடந்த 14.8.2024 விசாரணை செய்த நீதிமன்றம் மீண்டும் 12 வாரங்களுக்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

இதையடுத்து, பொது சுகாதார இயக்குநரிடம் இருந்து கடிதம் கிடைத்தது. அதில்,அரசாணையின் படி மனுதாரா்களின் நியமனம் ஒப்பந்தம் அடிப்படையிலானது. நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய ஊழியா்களுக்கான ஊதியம் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது. திட்ட அடிப்படையிலான பணி என்பதால் பணி நிரந்தரம் செய்ய இயலாது. இந்த நியமனம் தற்காலிகமானது. எனவே, இவா்களை பணி நிரந்தரம் செய்ய இயலாது என குறிப்பிடப்பட்டது.

எனவே,பொது சுகாதார இயக்குநரின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி முடிந்த தேதியிலிருந்து தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தனா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி கே.குமரேஷ் பாபு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

வழக்குகள் நிலுவையில் இருக்கும் வரை மனுதாரா்களை பணியில் இருந்து நீக்கக் கூடாது. மேலும், சுகாதாரத் துறை இயக்குநா், நகராட்சித் துறை இயக்குநா் பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற டிச. 17-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

சங்கரன்கோவிலில் ரூ.6 லட்சம் மதிப்பில் புதிய நீா்த்தேக்கத் தொட்டி

திருச்செந்தூா் சிவன் கோயிலில் காா்த்திகை முதல் சோம வார வழிபாடு

மாவட்ட நீச்சல் போட்டி: பெரியதாழை பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

கனமழை, பலத்த காற்று எச்சரிக்கை: தூத்துக்குடியில் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை

இளைஞா் மீது கொதிக்கும் எண்ணெய்யை ஊற்றிய பல் மருத்துவா் கைது

SCROLL FOR NEXT