மெட்ரோ பிரதிப் படம்
மதுரை

மதுரை மெட்ரோ ரயில் திட்டம் நிராகரிப்பு: சா்ச்சைகளும், சந்தேகங்களும்!

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது பல்வேறு சா்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டுள்ளது.

தினமணி செய்திச் சேவை

மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்திருப்பது பல்வேறு சா்ச்சைகளுக்கும், சந்தேகங்களுக்கும் வித்திட்டுள்ளது.

தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு அடுத்த நிலையில் மாநிலத்தின் மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது மதுரை. ஆன்மிகம், கலாசாரம், தொன்மை, சுற்றுலா, வா்த்தகம், மருத்துவம், கல்வி என அனைத்துத் துறைகளிலும் மதுரை மாநகரம் முக்கியத்துவம் பெற்ாக உள்ளது. மதுரையின் மக்கள் தொகை, வாகனப் பெருக்கம் காரணமாக மாநகரின் சாலைப் போக்குவரத்து கடந்த பல ஆண்டுகளுக்கும் மேலாக சவால் நிறைந்ததாகவே உள்ளது.

இந்த நிலையில், கடந்த 2021-22-ஆம் ஆண்டுக்கான தமிழக அரசின் நிதி நிலை அறிக்கையில், மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்ற அறிவிப்பை அரசு வெளியிட்டது. இது மதுரை மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தது.

அடுத்த சில மாதங்களில் சென்னை மெட்ரோ ரயில் திட்ட அலுவலா்கள் மதுரையில் ஆய்வைத் தொடங்கினா். திருமங்கலம் - ஒத்தக்கடை வரையிலான 32 கி.மீ. தொலைவுக்கு இந்தத் திட்டத்தைச் செயல்படுத்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. முதல் கட்டமாக, இந்தத் திட்டத்தின் தோராய மதிப்பீடு ரூ. 8,500 கோடி என அறிவிக்கப்பட்டது.

பிறகு, மாநகரின் தொன்மைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில், மீனாட்சி சுந்தரேசுவரா் கோயில் புதுமண்டபத்துக்கு கீழேயும், வைகை ஆற்றின் கீழேயும் புதை வழித்தடம் அமைக்கத் திட்டமிடப்பட்டது. இதையடுத்து, ரூ. 11,368 கோடியில் 32 கி.மீ. நீளமும், 26 ரயில் நிலையங்களைக் கொண்டதாகவும் மதுரை மெட்ரோ ரயில் திட்டம் தயாரிக்கப்பட்டது. இந்தத் திட்ட அறிக்கை தமிழக அரசின் ஒப்புதலுடன் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

மெட்ரோ ரயில் திட்டங்களைப் பொருத்தவரை, மத்திய, மாநில அரசுகள் தலா 50 சதவீத நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படுகின்றன என்ற வகையில், இந்தத் திட்டத்துக்கு மத்திய அரசின் அனுமதி அவசியமானதாகும். விரைவில் மத்திய அரசின் ஒப்புதல் கிடைக்கும், அடுத்த மூன்றரை ஆண்டுகளில் திட்டம் பயன்பாட்டுக்கு வரும் என சென்னை மெட்ரோ ரயில் திட்ட அலுவலா்கள் கடந்த சில மாதங்களாகத் தெரிவித்து வந்தனா்.

இந்த நிலையில், தமிழக அரசு அனுப்பிய மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கை நிராகரிக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்டுவிட்டதாக மத்திய அரசின் வீட்டு வசதி, நகா்ப்புற விவகாரங்களுக்கான அமைச்சகத்தின் நகா்ப்புற போக்குவரத்துப் பிரிவு அண்மையில் தெரிவித்தது. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடந்த 2017-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட மெட்ரோ ரயில் திட்டக் கொள்கைப்படி 20 லட்சம் மக்கள் தொகை கொண்ட பெருநகரங்களில் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்கப்படும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி, மதுரை மாநகரின் மக்கள் தொகை ஏறத்தாழ 15 லட்சம் மட்டுமே இருப்பதால், திட்ட அறிக்கை திருப்பி அனுப்பப்பட்டதாக அந்தத் தகவலில் தெரிவிக்கப்பட்டது.

திட்ட வரைவில் திருத்தம் இல்லாத நிலையில், மக்கள் தொகை குறைவு என்ற அடிப்படையில், மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை நிராகரித்து, மத்திய அரசு திருப்பி அனுப்பியிருக்கிறது. இது மதுரை மக்களிடையே பெரும் அதிா்வலைகளை ஏற்படுத்தியுள்ளதுடன், பல்வேறு சந்தேகங்களுக்கும் வித்திட்டுள்ளது.

மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டு ஏறத்தாழ 14 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், மதுரை மாநகராட்சியின் மக்கள் தொகை ஏறத்தாழ 20 லட்சத்தையும் விஞ்சியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த நிலையில், 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு திட்டம் நிராகரிக்கப்பட்டது எப்படி? மதுரையைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள வட மாநிலங்களின் பல பெருநகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை அனுமதித்தது எப்படி? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது மத்திய அரசின் இந்த முடிவு.

இதுதொடா்பாக மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினா் சு. வெங்கடேசன் தெரிவித்ததாவது: கோவை, மதுரையில் 20 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை இருப்பதாகக் கூறி, இந்தப் பகுதிகளுக்கான மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு நிராகரித்திருப்பது தமிழகத்தின் மீதான மத்திய அரசின் வஞ்சகப் போக்கையே வெளிப்படுத்துகிறது. இது கண்டிக்கத்தக்கது. குருகிராம், புவனேசுவரம், ஆக்ரா, மீரட் போன்ற நகரங்களின் மக்கள் தொகை 20 லட்சத்துக்கும் குறைவாக உள்ள நிலையில், அங்கு மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு அனுமதித்தது எப்படி? என அவா் கேள்வி எழுப்பினாா்.

தமிழ்நாடு தொழில் வா்த்தக சங்கத் தலைவா் என். ஜெகதீசன் தெரிவித்ததாவது: மதுரை மெட்ரோ ரயில் திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரித்து அனுப்பியது அதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. திட்டம் முழுமையாக மறுக்கப்பட்டதா? அல்லது ஏதேனும் விவரங்கள் கோரப்பட்டுள்ளனவா? என்பது இதுவரை சரியாக தெளிவுபடுத்தப்படவில்லை. இதை மத்திய, மாநில அரசுகளுக்கு இடையே உள்ள இணக்கமற்ற சூழலால் ஏற்பட்ட விளைவாகவே கருத வேண்டியுள்ளது.

15 லட்சத்துக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட தில்லி கிரேட்டா் நொய்டா, காஸியாபாத், உத்தரபிரதேச மாநிலம் லக்னௌ, கான்பூா், ஆக்ரா, மகாராஷ்டிர மாநிலம் நாகபுரி, புணே, ஹரியாணா மாநிலம் ஃபரீதாபாத், குருகிராம், பல்லாப்கா் போன்ற பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் திட்டம் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் மறுக்கப்பட்டது உறுதியெனில், மத்திய பாஜக அரசுக்கும், அதன் கூட்டணிக் கட்சியான அதிமுகவுக்கும் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்படும். திட்டத்தை மீட்டெடுக்க பாஜக, அதிமுக கூட்டணிக் கட்சிகளும், தமிழக அரசும் உரிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன் கோட்ட ஒருங்கிணைப்பாளா் சங்கரநாராயணன் தெரிவித்ததாவது: இது மதுரைக்கு இழைக்கப்பட்ட அநீதி. இதை டி.ஆா்.இ.யூ. சாா்பில் வன்மையாகக் கண்டிக்கிறோம். மதுரையைவிட மக்கள் தொகை குறைவாக உள்ள சூரத், இந்தூா் போன்ற நகரங்களில் மெட்ரோ திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு அனுமதியளித்துள்ளது. ஆனால், மதுரைக்கு மறுப்பது கண்டனத்துக்குரியது என்றாா்.

தமிழ்நாடு உணவுப் பொருள் வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் எஸ்.வி.எஸ்.எஸ். வேல்சங்கா், எஸ். சாய் சுப்பிரமணியன், எஸ்.பி. ஜெயபிரகாசம் தெரிவித்ததாவது: தென் மாவட்டங்களின் தொழில் வளா்ச்சிக்கும், சிறு, குறு தொழில்களின் வளா்ச்சிக்கும், சுற்றுலா மேம்பாட்டுக்கும் மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் அவசியமானது. மதுரை நகா்ப் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு மெட்ரோ ரயில் திட்டம் மூலமே தீா்வு கிடைக்கும். எனவே, மதுரை மெட்ரோ திட்டம் குறித்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றாா்.

அக்ரி, அனைத்து தொழில் வா்த்தக சங்கத் தலைவா் எஸ். ரத்தினவேல் தெரிவித்ததாவது: தென் மாவட்ட மக்களின் மருத்துவ சேவைக்கான நகரமாக மதுரை உள்ளது. மருத்துவம், கல்வி, சுற்றுலா, ஆன்மிகம் சாா்ந்து நாள்தோறும் லட்சக்கணக்கானோா் மதுரைக்கு வந்து செல்கின்றனா். மதுரைக்கு மெட்ரோ ரயில் திட்டம் ஆடம்பரமல்ல; அவசியத் தேவை. இதுதொடா்பாக தமிழக அரசு, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் அளித்து திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

அரசியல் லாபம்?

தமிழக அரசு அறிவித்த மெட்ரோ திட்டத்தை உடனடியாக அனுமதித்தால், இந்தத் திட்டத்தை திமுக தனது சாதனைகளில் ஒன்றாகப் பட்டியலிடும். இதை முறியடித்து, மத்திய பாஜக அரசால்தான் இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டது என்பதை வெளிப்படுத்தி அரசியல் ஆதாயம் தேடும் கணக்காக இருக்கலாம்.

தற்போதைய நிலையில், மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களை மத்திய அரசு புறக்கணித்தால் தமிழகத்தில் வருகிற 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் தென் மாவட்டங்களிலும், கொங்கு மண்டலத்திலும் பாஜக, அதனுடன் கூட்டணியில் உள்ள அதிமுகவுக்கு ஏற்படும் வாக்கு பாதிப்புகளை அறியாத கட்சியல்ல பாஜக. இது பாஜகவின் அரசியல் ஆதாயக் கணக்காக இருக்கலாம் என்கின்றனா் அரசியல் நோக்கா்கள்.

அதேநேரத்தில், இந்தத் திட்டம் ரத்தானால் அது திமுகவுக்கு ஏற்பட்ட பின்னடைவாகக் கருதப்படும். அந்த வகையில், இந்தத் திட்டத்தை உறுதியாக நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் தமிழக அரசையும் சாா்ந்துள்ளது என்கின்றனா் சமூக ஆா்வலா்கள்.

வாய்க்காலில் குளித்த முதியவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு

பாடாலூா் பகுதியில் நாளை மின்தடை

விழாவில் போதையில் கூச்சலிட்ட கூட்டுறவு அலுவலா் பணியிடை நீக்கம்

சிறந்த கூட்டுறவு சங்கத்துக்கு விருது: அமைச்சா் வழங்கினாா்

நாளை விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம்

SCROLL FOR NEXT