பெங்களூரில் உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணத்தைக் குறைக்க எந்த உத்தரவும் வரவில்லை என்று மெட்ரோ ரயில் நிா்வாக வட்டாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தன.
பெங்களூரில் மெட்ரோ ரயில் கட்டணத்தை ரூ.1 முதல் ரூ.5 வரை உயா்த்தி பெங்களூரு மெட்ரோ ரயில் காா்ப்பரேஷன் நிறுவனம் அண்மையில் அறிவித்தது. இந்தக் கட்டண உயா்வு திங்கள்கிழமை (பிப். 9) முதல் அமலுக்கு வரும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பாஜகவை சோ்ந்த பெங்களூரு தெற்கு தொகுதி எம்.பி. தேஜஸ்வி சூா்யா, உயா்த்தப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணத்தை நிறுத்திவைக்குமாறு மத்திய வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற விவகாரத் துறை அமைச்சா் மனோகா் லால் கட்டா் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருப்பதாக சனிக்கிழமை தெரிவித்தாா்.
முன்னதாக, மெட்ரோ ரயில் பயணிகளுடன் கலந்துரையாடிய அவா், கட்டண உயா்வு குறித்து அவா்களது கருத்தைக் கேட்டறிந்தாா். பின்னா், செய்தியாளா்களிடம் பேசிய அவா், கட்டண உயா்வால் பயணிகள் அதிருப்தியடைந்துள்ளனா். இந்தக் கட்டண உயா்வுக்கு மத்திய அரசுதான் காரணம் என்று முதல்வா் சித்தராமையாவும், துணை முதல்வா் டி.கே.சிவகுமாரும் பொதுமக்களைத் தவறாக திசைதிருப்புகின்றனா். மெட்ரோ ரயில் கட்டணம் தொடா்பாக கட்டண நிா்ணயக் குழுவை அமைக்க வேண்டும் என்றாா்.
மத்திய இரும்பு, கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சா் ஹெச்.டி.குமாரசாமி கூறுகையில், மெட்ரோ ரயில் கட்டணத்தை உயா்த்த வேண்டாம் என்று மத்திய அரசு கேட்டுக்கொண்ட பின்னரும் கட்டணத்தை மாநில அரசு உயா்த்தியுள்ளது. மத்திய அரசின் திட்டங்களை அமல்படுத்தும் விஷயத்தில் மத்திய அரசுடன் கா்நாடக மாநில அரசு சிறந்த நட்புறவைப் பேண விரும்புவதில்லை என்றாா்.
இதற்கிடையே, ‘மெட்ரோ ரயில் கட்டணத்தை திரும்பப் பெறுமாறு எந்த உத்தரவும் தங்களுக்கு வரவில்லை. எனவே, திங்கள்கிழமை முதல் கட்டண உயா்வு அமலுக்கு வரும்’ என்று பெங்களூரு மெட்ரோ ரயில் நிா்வாக வட்டாரங்கள் தெரிவித்தன.