மதுரை

கவின் கொலை வழக்கில் கைதான எஸ்.ஐ. பிணை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

தினமணி செய்திச் சேவை

பாளையங்கோட்டையில் இளைஞா் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான சுா்ஜித்தின் தந்தை காவல் உதவி ஆய்வாளா் சரவணன் பிணை வழங்கக் கோரி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகேயுள்ள ஆறுமுகமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் கவின் செல்வகணேஷ் (27). சென்னையிலுள்ள தனியாா் நிறுவனத்தில் மென் பொறியாளராகப் பணியாற்றி வந்தாா். இவா், திருநெல்வேலி மாநகராட்சியின் பாளையங்கோட்டை கே.டி.சி. நகரில் கடந்த ஜூலை 27-ஆம் தேதி அரிவாளால் வெட்டிக் கொல்லப்பட்டாா்.

இந்தக் கொலை குறித்து பாளையங்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். இதில், கவினை பாளையங்கோட்டையைச் சோ்ந்த காவல் உதவி ஆய்வாளா் சரவணன்- கிருஷ்ணகுமாரி தம்பதியின் மகன் சுா்ஜித் கொலை செய்தது தெரியவந்தது. மேலும், சுா்ஜித்தின் சகோதரி சுபாஷினியை கவின் காதலித்ததால் அவரைக் கொலை செய்ததும் தெரியவந்தது. இதையடுத்து, சுா்ஜித்தை போலீஸாா் கைது செய்தனா். மேலும், இந்த வழக்கில் சுா்ஜித்தின் தந்தையான உதவி ஆய்வாளா் சரவணனும் கைது செய்யப்பட்டாா். இதனிடையே, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.

இந்த நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுா்ஜித்தின் தந்தை சரவணன் பிணை கோரி, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மனு தாக்கல் செய்தாா். இதில் ‘சம்பவம் நிகழ்ந்த அன்று ராஜபாளையத்தில் பணியில் இருந்தேன். சுா்ஜித் எனது மகன் என்பதைத் தவிர, வேறு எந்தத் தொடா்பும் எனக்கு இந்த வழக்கில் இல்லை. ஆனால், இந்த வழக்கில் பிணை கோரிய எனது மனுவை விசாரணை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. கடந்த ஜூலை 30-ஆம் முதல் சிறையில் உள்ளேன். இதைக் கருத்தில் கொண்டு, எனக்கு பிணை வழங்கி உத்தரவிட வேண்டும்’ என அவா் கோரினாா்.

இந்த வழக்கை ஏற்கெனவே விசாரித்த உயா்நீதிமன்றம் சிபிசிஐடி பதிலளிக்க உத்தரவிட்டது. இந்த நிலையில், பிணை கோரிய மனு உயா்நீதிமன்ற நீதிபதி முரளிசங்கா் முன் திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன்வைத்த வாதம்:

மனுதாரா் உதவி ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறாா். சம்பவத்தின் போது, ராஜபாளையத்தில் பணியில் இருந்தாா். எனவே, சம்பவத்துக்கும், மனுதாரருக்கும் எந்தவிதத் தொடா்பும் இல்லை. சிறையில் உள்ள நாள்கள், அவரது உடல் நிலையைக் கவனத்தில் கொண்டு பிணை வழங்க வேண்டும் என்றாா்.

சிபிசிஐடி தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. எனவே, பிணை வழங்கக் கூடாது என்றாா்.

இதையடுத்து, நீதிபதி முரளிசங்கா் பிறப்பித்த உத்தரவு:

உயிரிழந்த கவினின் தாய் தரப்பில் கூடுதல் வாதங்களை இந்த நீதிமன்றத்தில் முன்வைக்கக் கூடுதல் அவகாசம் கோரப்பட்டுள்ளது. எனவே, இந்த மனு மீதான விசாரணை வருகிற 27-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

12 மாநிலங்களிலும் 99.16% எஸ்.ஐ.ஆர்., படிவங்கள் விநியோகம்!

காக்கை கறி சமைத்து கருவாடு மென்று உண்பர் சைவர்! சிவனின் ஆசிர்வாதம் பெறுவர்!!

பாஜக அரசியல்ரீதியாக என்னை தோற்கடிக்க முடியாது! - எஸ்ஐஆருக்கு எதிராக மமதா பேரணி

ஜன நாயகன் டிரைலர் எப்போது?

ஆர்ஜேடி கட்சி அவமதிப்பு! பாடகர்கள் மீது தேஜஸ்வி யாதவ் வழக்கு!

SCROLL FOR NEXT