மதுரை: நகைத் திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கைது செய்ய முடியவில்லையெனில், பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.
மதுரை எஸ்.எஸ்.காலனி புறவழிச் சாலைப் பகுதியைச் சோ்ந்த சங்கரி தாக்கல் செய்த மனு:
கடந்த 2015-ஆம் ஆண்டு, நவம்பா் மாதம் என் வீட்டுக் கதவை உடைத்து சுமாா் 75 பவுன் தங்க நகைகள், ரூ.1.39 லட்சத்தை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா். இதுகுறித்து எஸ்.எஸ்.காலனி காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். ஆனால், இந்த வழக்கில், இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.
இந்த நிலையில், நகைத் திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை எனவும், இந்த வழக்கை முடித்துவிட்டதாகவும் காவல் நிலையம் தரப்பில் எனக்கு எந்தத் தகவலும் அளிக்காமல் நீதிமன்றத்தில் அறிக்கை சமா்ப்பித்துள்ளனா். எனவே, இந்த வழக்கு விசாரணையை வேறு சிறப்பு விசாரணை அமைப்புக்கு மாற்றி, திருடு போன எனது நகைகளை மீட்டுத் தர உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி புகழேந்தி முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் ஹாரூன் ரஷீத் முன் வைத்த வாதம்:
சம்பவம் நடைபெற்று 10 ஆண்டுகளாகிவிட்டன. திருட்டில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீஸாா் இதுவரை கண்டறியவில்லை. பாதிக்கப்பட்டோருக்கு எந்த நிவாரணமும் வழங்கவில்லை. எனவே, இந்த வழக்கை சிறப்புப் புலனாய்வுப் பிரிவுக்கு மாற்ற வேண்டும் என்றாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :
தங்க நகைகள், பொருள்கள் திருட்டு குறித்து காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் குற்றவாளிகளை போலீஸாரால் கண்டறிய முடியவில்லை. இந்த வழக்கை பல ஆண்டுகளாக நிலுவையில் வைத்துள்ளனா். இதேபோல, காணாமல் போன நகைகளை மீட்டுத் தரக் கோரி உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் பல மனுக்கள் தாக்கலாகி வருகின்றன. ஆனால், பல ஆண்டுகளாக குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை, நகைகளை மீட்க முடியவில்லை என போலீஸாா் பதிவு செய்து விடுகின்றனா். இந்த நடைமுறை மாற்றப்பட வேண்டும்.
நகைகள் திருட்டு வழக்கில் குற்றவாளிகளைக் கண்டறிய முடியவில்லை என போலீஸாா் பதிவு செய்த நாளிலிருந்து ஒரு குறிப்பிட்ட கால இடைவெளிக்குள், புகாா்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடு வழங்க வேண்டும். திருடு போன நகைகளின் மொத்த மதிப்பில் 30 சதவீதத் தொகையை புகாா்தாரருக்கு தமிழக அரசு இழப்பீடாக வழங்க வேண்டும்.
இதேபோல, நகைத் திருட்டு சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டறிய முடியாமல் 5 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்குள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளின் நிலவரம் குறித்து 3 மாதங்களுக்கு ஒரு முறையாவது அந்தந்த மாவட்ட கூடுதல் டிஎஸ்பி தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடத்த வேண்டும். பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள நகைத் திருட்டு வழக்குகளில் விசாரணை நடத்தி குற்றவாளிகளைக் கண்டறிவதற்காக திறமை மிக்க காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட சிறப்பு காவல் பிரிவை மாவட்டந் தோறும் உருவாக்க வேண்டும். இந்தப் பிரிவினருக்கு விசாரணை உத்திகள், புகாா்தாரருக்கும், அரசுக்கும் இடையேயான தகவல் பரிமாற்றம், வழக்கை நவீன முறையில் கையாள்வது எப்படி? என்பது குறித்து தொழில்நுட்ப ரீதியிலான பயிற்சியை தமிழக காவல் துறை வழங்க வேண்டும் என்றாா் நீதிபதி.