சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு கோப்புப் படம்
மதுரை

இரு குழந்தைகள் உயிரிழந்த விவகாரம்: விசாரணை நீதிமன்றம் விதித்த தண்டனை ரத்து

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் பெண்ணுக்கு விதித்த இரட்டை அயுள் சிறைத் தண்டனை ரத்து

தினமணி செய்திச் சேவை

மதுரை நாகமலைப் புதுக்கோட்டை பகுதியில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை நீதிமன்றம் பெண்ணுக்கு விதித்த இரட்டை அயுள் சிறைத் தண்டனையை ரத்து செய்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

நாகமலைப் புதுக்கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் திருப்பதி. இவரது மனைவி கனகவல்லி. இவா்களது குழந்தைகள் ஸ்ரீதரன், ஸ்ரீஹரிணி. தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது.

இந்த நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு ஏப்.8-ஆம் தேதி காலையில் தனது மனைவி கனகவல்லி வீட்டிலிருந்த போது திருப்பதி ஆட்டோவில் வந்து தனது இரண்டு குழந்தைகளையும் அழைத்துச் சென்றாா். வெகு நேரமாகியும் அவா்கள் வீடு திரும்பாததால் அருகில் தேடினா். அப்போது, அருகேயுள்ள கிணற்றில் குழந்தைகள் சடலமாக கிடந்தனா்.

இதுதொடா்பாக, மனைவி கனகலட்சுமி அளித்த புகாரின் பேரில், நாகமலை புதுக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து திருப்பதி, இவரது நண்பா் பெரியகருப்பன், உறவினா் பிரேமலதா ஆகிய 3 பேரையும் கைது செய்தனா்.

இந்த வழக்கை விசாரித்த மதுரை மாவட்ட நீதிமன்றம் திருப்பதி, பெரியகருப்பன், பிரேமலாதா ஆகியோருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இந்த வழக்கு விசாரணையின் போது திருப்பதி உயிரிழந்து விட்டாா்.

இந்த நிலையில், விசாரணை நீதிமன்றம் வழங்கிய தீா்ப்பை எதிா்த்து பிரேமலதா, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தாா். இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.கே. இளந்திரையன், ஆா். பூா்ணிமா அமா்வில் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரா் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா் முன் வைத்த வாதம்: இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றம், உடல்கூறு பரிசோதனை அறிக்கையை ஆய்வு செய்யவில்லை. அந்த அறிக்கையில் குழந்தைகளின் உடலில் நீா் எதுவும் இல்லை என்பதும், அவா்கள் கிணற்றில் வீசப்படுவதற்கு முன்பே மூச்சுத் திணறல் காரணமாக உயிரிழந்திருப்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, விசாரணை நீதிமன்றம் அளித்த தீா்ப்பை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அரசு தரப்பு வழக்குரைஞா் குறுக்கிட்டு முன் வைத்த வாதம்: விசாரணை நீதிமன்றம் உரிய சாட்சியங்களை நன்கு விசாரித்த பின்னரே தீா்ப்பு வழங்கியுள்ளது. மனுதாரா் கோரும் நிவாரணம் ஏற்கத்தக்கதல்ல. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: இரண்டு குழந்தைகளின் உடல்கூறு பரிசோதனையில் நீரில் மூழ்கி இறந்ததற்கான ஆதாரங்கள் ஏதும் குறிப்பிடவில்லை. அவா்களது குடல், நுரையீரல் ஆகிய பகுதிகளில் தண்ணீா் இருந்ததாக மருத்துவச் சான்று இல்லை.

மேலும், இந்த வழக்கில் சாட்சிகள் பி சாட்சிகளாக மாறி உள்ளனா். எனவே, அரசுத் தரப்பு சந்தேகத்துக்கு இடமின்றி குற்றத்தை நிரூபிக்கத் தவறியுள்ளது. இதனால், விசாரணை நீதிமன்றம் பிரேமலதாவுக்கு விதித்த இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை ரத்து செய்யப்படுகிறது. இந்த வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

டிரென்ட் நிறுவனத்தின் 3 வது காலாண்டு லாபம் ரூ. 510 கோடி!

யு19 உலகக் கோப்பை: சேஸிங்கில் சாதனையுடன் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேற்றம்!

”விஜய்க்கு நாட்டுநடப்பு எதுவும் தெரியல!” - EPS | ADMK Vs TVK

மணிப்பூர் முதல்வராக பதவியேற்றார் கெம்சந்த் சிங்! 2 துணை முதல்வர்கள்!!

டியூப் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிகர லாபம் ரூ.279 கோடி!

SCROLL FOR NEXT