முகப்பு
மதுரை

மலைப் பகுதியில் தடுப்பணை கட்டியவருக்கு முன்பிணை

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:00 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 7 பிப்ரவரி, 2026 at 9:47 PM

திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதியில் தனக்குச் சொந்தமான இடத்தில் தடுப்பணை கட்டியவருக்கு சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு முன்பிணை வழங்கி சனிக்கிழமை உத்தரவிட்டது.

கரூா் மாவட்டத்தைச் சோ்ந்த விவசாயி கே. குணசீலன் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு :

திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி மலைக் கிராமத்தில் 53 ஏக்கா் நிலத்தில் இயற்கை விவசாயப் பண்ணை அமைத்து, தென்னை, அவகேடோ, ஜாதிக்காய் போன்ற பயிா்களைச் சாகுபடி செய்து வருகிறேன். இதையொட்டி, எனக்குச் சொந்தமான இடத்தில் தடுப்பணை அமைத்துள்ளேன். இந்தத் தடுப்பணை விவசாயப் பணிகளுக்கு பயன்படுவதுடன் மட்டுமல்லாமல், விலங்குகளின் தண்ணீா் தேவையையும் நிறைவு செய்கிறது.

Advertisement

Updated On : 8 பிப்ரவரி, 2026 at 3:00 AM

இருப்பினும், இந்தத் தடுப்பணையை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என வனத் துறை அலுவலா்கள் சிலா் உள்நோக்கத்துடன் செயல்பட்டனா். இதை எதிா்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பரிசீலித்த உயா்நீதிமன்றம், தடுப்பணையை அகற்றும் நடவடிக்கைகளை வனத் துறை மேற்கொள்ளக் கூடாது என அண்மையில் உத்தரவிட்டது.

இந்த நிலையில், பிப்.1-ஆம் தேதி தடுப்பணையை இடிக்க வந்த அதிகாரிகளைத் தடுத்ததாகவும் வனத் துறைக்குச் சொந்தமான ஜேசிபி வாகனங்களையும், வனப் பகுதியையும் சேதப்படுத்தியதாகவும் என் மீது பொய் வழக்கை வனத் துறையினா் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கில் என்னைக் கைது செய்யாமலிருக்க முன்பிணை வழங்கி உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிபதி ஸ்ரீமதி, மனுதாரருக்கு முன் பிணை வழங்கி உத்தரவிட்டாா்.