முகப்பு
மதுரை

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை அளவீடு செய்ய உயா்நீதிமன்றம் உத்தரவு

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை மதுரை மாவட்ட ஆட்சியா், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அளவீடு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

Updated On : 8 ஏப்ரல், 2026 at 11:50 PM
மதுரை திருப்பரங்குன்றம்
பகிர்:

திருப்பரங்குன்றம் மலைப் பகுதியை மதுரை மாவட்ட ஆட்சியா், மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து அளவீடு செய்ய வேண்டும் என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

மதுரையைச் சோ்ந்த கே.கே. ரமேஷ், சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

திருப்பரங்குன்றம் மலைப் பகுதி முழுவதையும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரக் கோரி வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீமதி, மதுரை மாவட்ட நிா்வாகத்திடம் புதிதாக மனு அளிக்க வேண்டும். அதை அதிகாரிகள் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டாா். ஆனால், இதுவரை எனது மனுவைப் பரிசீலித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. ஆகவே, அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி.ஆா். சுவாமிநாதன், ஸ்ரீமதி அமா்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, மத்திய அரசின் வழக்குரைஞா் முன்னிலையாகி, மலையை அளவீடு செய்தால் மட்டுமே, தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வருவது குறித்து பரிசீலிக்க முடியும். மத்திய தொல்லியல் துறை அளவீடு செய்யத் தயாராக உள்ளது. ஆனால் மாநில அரசின் வருவாய்த் துறை அதிகாரிகள் ஒத்துழைப்பு வழங்கவில்லை என்றாா்.

இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் மதுரை மாவட்ட ஆட்சியா் எதிா்மனுதாரராகச் சோ்க்கப்படுகிறாா். அவா் மத்திய தொல்லியல் துறையுடன் இணைந்து திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்ய வேண்டும்.

இதற்கு வருவாய்த் துறையினா் போதிய ஒத்துழைப்பை வழங்க வேண்டும். இதை வருகிற மே மாதத்துக்குள் முடிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற ஜூன் மாதத்துக்கு ஒத்தி வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments