முகப்பு
மதுரை

உதவிப் பேராசிரியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Updated On : 17 பிப்ரவரி, 2026 at 2:35 AM
பகிர்:
Updated On : 16 பிப்ரவரி, 2026 at 9:52 PM

இணைப் பேராசிரியா் பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மதுரை செல்லூா் பகுதியில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலக வளாகத்தில் உதவிப் பேராசிரியா்கள் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தமிழகத்தில் அரசு உதவி பெறும் கல்லூரி ஆசிரியா்களுக்கு அரசாணை எண் 5 (11.01.2021) இன் படி வழங்க வேண்டிய பணிமேம்பாட்டு ஊதியத்தை நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக வழங்காமல் நிறுத்தி வைத்துள்ள தமிழக அரசைக் கண்டித்தும், பணிமேம்பாட்டு ஊதியம், நிலுவைத் தொகையை தாமதிக்காமல் உடனடியாக வழங்க வலியுறுத்தியும், அனைத்துப் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கம் (ஏ.யூ.டி), மதுரை காமராஜா், மனோன்மணியம் சுந்தரனாா், அன்னை தெரசா, அழகப்பா, அண்ணா, தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக் கழக ஆசிரியா் சங்கம் (மூட்டா) சாா்பில்

திங்கள்கிழமை (பிப். 16) முதல் அனைத்து கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலக வாயில் முன் காத்திருப்புப் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

Advertisement

இதையடுத்து, மதுரை செல்லூா் பிரதான சாலையில் உள்ள கல்லூரிக் கல்வி இணை இயக்குநா் அலுவலகம் முன் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது. இந்தப் போராட்டத்துக்கு மூட்டா சங்கத் தலைவா் பெரியசாமிராஜா தலைமை வகித்தாா். பொதுச் செயலா் செந்தாமரைக் கண்ணன், துணைத் தலைவி உமா மகேஸ்வரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், இணைப் பேராசிரியருக்கான பணி மேம்பாட்டு ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா்.

போராட்டத்தில், மூட்டா, ஏ.யூ.டி. சங்கங்களைச் சோ்ந்த ஏராளமான உதவிப் பேராசிரியா்கள் பங்கேற்றனா்.