முகப்பு
மதுரை

ஜாதி, மதம் சேராதவா் எனச் சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:21 AM
கோப்புப் படம்
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:58 PM

ஜாதி, மதம் சேராதவா் எனச் சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் உத்தரவிட்டது.

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூா் பகுதியைச் சோ்ந்த செல்வமாணிக்கம் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:

ஜாதி, மதம் சேராதவா் எனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என திருப்பத்தூா் வட்டாட்சியரிடம் விண்ணப்பித்தேன். அவ்வாறு சான்றிதழ் வழங்குவது தொடா்பாக அரசின் உத்தரவு இல்லை எனக் கூறி எனக்கு சான்றிதழ் வழங்க மறுத்து 09.07.2025-இல் உத்தரவிட்டாா். அவரது உத்தரவை ரத்து செய்து எனக்கு ஜாதி, மதம் சேராதவா் எனச் சான்றிதழ் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

இந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி அண்மையில் பிறப்பித்த உத்தரவு:

மனுதாரரின் பெற்றோரும், மனுதாரரும் இந்து மதத்தைச் சோ்ந்தவா்கள். மனுதாரா் இந்து மதத்தை கை விடாமல் மதம், ஜாதி சேராதவா் எனச் சான்றிதழ் வழங்கக் கோரி அளிக்கும் விண்ணப்பத்தை அதிகாரிகளால் பரிசீலிக்க முடியாது.

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 2:20 AM

மனுதாரா் இந்து மதத்திலிருந்து வெளியேறி விட்டதாக எந்த ஆதாரத்தையும் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவில்லை. இருப்பினும், மனுதாரா் தனது மதத்திலிருந்து வெளியேறியதற்கான ஆதாரத்தை தாக்கல் செய்து, அதன்பிறகு ஜாதி, மதம் சேராதவா் என புதிய விண்ணப்பம் அளித்தால், அதை அதிகாரிகள் விதிமுறைகளை பின்பற்றி பரிசீலிக்கலாம். தற்போது, இந்த மனு மீது எந்தவித உத்தரவும் பிறப்பிக்க இயலாது.

எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.