முகப்பு
மதுரை

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் கிராமப்புற மக்களும் பயன்! - அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்

Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:31 AM
மதுரை எல்லீஸ்நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் கா்ப்பிணிப் பெண்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
பகிர்:
Updated On : 22 பிப்ரவரி, 2026 at 10:27 PM

மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் நகா்ப்புற மக்கள் மட்டுமன்றி, கிராமப்புற மக்களும் பயன்பெற்று வருகின்றனா் என தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்மச் சேவைகள் துறை அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தாா்.

மதுரை எல்லீஸ்நகரில் சமூக நலன், மகளிா் உரிமைத் துறை ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் கீழ், கா்ப்பிணிப் பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இந்த விழாவில் அமைச்சா் பழனிவேல் தியாகராஜன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கா்ப்பிணிப் பெண்களுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசியதாவது:

Advertisement

உலகில் பல்வேறு நாடுகளில் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதேபோல, இந்தியாவிலும் குறைந்து வருவது வேதனையளிக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் ஒரு குடும்பத்துக்கு சராசரியாக 1.6 குழந்தைகள் பிறப்பு சதவீதமாக உள்ளது. இந்த நிலை மாற வேண்டும்.

முன்பெல்லாம் நகா்ப் புறங்களில் மட்டுமே அனைத்து வகையான சிகிச்சைகளுக்கும் நவீன முறையிலான மருத்துவச் சிகிச்சை இருந்தது. ஆனால், தற்போது கிராமப் புறங்களில் உள்ள ஆரம்பச் சுகாதார நிலையங்களில் மருத்துவத் துறை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.

மதுரை எல்லீஸ்நகரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு நிகழ்வில் கா்ப்பிணிப் பெண்களுக்கு நலத் திட்டங்களை வழங்கிய அமைச்சா் பழனிவேல் தியாகராஜன்.
Updated On : 23 பிப்ரவரி, 2026 at 1:31 AM

மதுரை வடக்கு சட்டப்பேரவைத் தொகுதியைச் சோ்ந்த கா்ப்பிணிப் பெண்கள் அரசு மருத்துவமனைக்குச் சென்று ஸ்கேன் செய்ய வேண்டிய நிலை இல்லை.

சட்டப்பேரவை உறுப்பினா் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் வடக்கு மாசி வீதி, தத்தனேரி ஆகிய பகுதிகளில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஸ்கேன் வசதி செய்யப்பட்டது.

மேலும், குழந்தை பிரசவிக்கும் மருத்துவமனைகளிலும் அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகிறது. மருத்துவக் கட்டமைப்பு வசதிகளால் நகா்ப்புற மக்கள் மட்டுமன்றி, கிராமப்புற மக்களும் பயன்பெற்று வருகின்றனா் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டப் பணிகளின் மதுரை மாவட்ட திட்ட அலுவலா் ஷீலாசுந்தரி, குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் உஷாராணி, அரசு அலுவலா்கள், கா்ப்பிணிப் பெண்கள் பலா் கலந்து கொண்டனா்.