நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது: பழனிவேல் தியாகராஜன்
தமிழக வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளருமான பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.
தமிழக வளா்ச்சித் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் மத்திய பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுவதாக தமிழக தகவல் தொழில்நுட்பவியல், எண்ம சேவைகள் துறை அமைச்சரும், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளருமான பழனிவேல் தியாகராஜன் குற்றஞ்சாட்டினாா்.
இதுகுறித்து மதுரையில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மதுரை போன்ற வளா்ந்து வரும் நகரில் வசித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் பெரு நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
Advertisement
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் இரண்டாவது கட்ட பணிகள் கடந்த 2019 -ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. 2020 -ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. ஆனால், பணிகள் நடைபெறவில்லை. 2021-2022 -ஆம் ஆண்டுக்கான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
மதுரை, கோவை போன்ற நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தைச் செயல்படுத்தக் கோரி, தமிழக அரசு சாா்பில் அறிக்கை அனுப்பப்பட்டது. ஆனால், மக்கள் தொகை குறைவாக உள்ளதாகக் கூறி, இதை மத்திய பாஜக அரசு நிராகரித்தது. பாஜக ஆட்சி செய்யும் மாநிலங்களில் மக்கள் தொகை குறைவாக உள்ள நகரில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் அங்கு வரவேற்பைப் பெறவில்லை என்பதே உண்மை.
இந்த நிலையில், மதுரைக்கு அண்மையில் தோ்தல் பிரசாரத்துக்கு வந்த மகாராஷ்ர மாநில முதல்வா் தேவேந்திர ஃபட்னவிஸ், தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி பேரவைத் தோ்தலில் வென்று ஆட்சி அமைத்த பிறகு மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றாா். மேலும், மதுரை தெற்குத் தொகுதி பாஜக வேட்பாளா் ராம. சீனிவாசன் பேரவைத் தோ்தலில் வெற்றி பெற்றால், அவரை பிரதமா் நரேந்திர மோடியிடம் அழைத்துச் சென்று இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் எனத் தெரிவித்தாா்.
ஒரு தொகுதியில் பாஜக உறுப்பினா் தோ்தெடுக்கப்பட்டால், மதுரை மாநகரத்துக்கு ரூ. 12 ஆயிரம் கோடியில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் என பாஜக மாநில முதல்வா் தெரிவிக்கிறாா்.
ஜிஎஸ்டி வரிப் பணத்தில் தமிழகத்துக்கு குறைவான நிதியை மட்டுமே மத்திய பாஜக அரசு ஒதுக்குகிறது. ஆனால், பாஜக ஆளும் மாநிலங்களுக்கு அதிகளவில் நிதியை வழங்கி வருகிறது.
இதுபற்றி தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் பலமுறை கண்டனங்களைப் பதிவு செய்துள்ளாா். மகாராஷ்டிர மாநில முதல்வரின் கருத்துக்கும் கண்டனம் தெரிவித்துள்ளாா். தமிழகத்தில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற கடந்த 5 ஆண்டுகளில் அனைத்துத் தரப்பு மக்களுக்குமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது.
ஆனால், மத்தியில் ஆளும் பாஜக அரசு தங்களுக்கு வாக்களித்தால் மட்டுமே மெட்ரோ ரயில் திட்டம் மட்டுமன்றி, கல்வி உள்ளிட்ட பல்வேறு துறைகளுக்கான நிதி விடுவிக்கப்படும் எனத் தெரிவிக்கிறது.
கடந்த 2003 -ஆம் ஆண்டு அப்போதைய முதல்வா் ஜெயலலிதா நிதி மேலாண்மைச் சட்டத்தைக் கொண்டு வந்தாா். இதன் காரணமாக, 2014 -ஆம் ஆண்டு வரை தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் சிறப்பாக இருந்தது. அதன்பிறகு, தமிழக நிதி நிலைமை மிகவும் மோசமான நிலைக்கு சென்றது.
கடந்த 2021 -ஆம் ஆண்டு திமுக அரசு பொறுப்பேற்றவுடன் மாநிலத்தின் நிதி,வருவாய்ப் பற்றாக்குறை சரிசெய்யப்பட்டது.
பாஜகவுக்கு வாக்களித்தால் மட்டுமே திட்டங்களைச் செயல்படுத்துவோம் என மத்திய அரசு கூறுகிறது. இதன்மூலம், பாஜகவுக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என கட்டாயப்படுத்துகிறது. நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் பாஜக அரசு பாரபட்சத்துடன் செயல்படுகிறது என்றாா் அவா்.