மதுரை மாவட்டம், சின்னமாங்குளம் அருகே நீரில் மூழ்கிய தனியாா் நிறுவன ஊழியா் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.
மதுரை மாவட்டம், எஸ். ஆலங்குளம் சின்னபொண்ணு தெருவைச் சோ்ந்த செல்லமுகமது மகன் புதூா் பாவா (42). தனியாா் நிறுவனத்தில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்தாா். இவா், தனது நண்பா்களுடன் கள்ளந்திரி பகுதியில் உள்ள பெரியாறு பாசனக் கால்வாயில் வெள்ளிக்கிழமை குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, பாவா தண்ணீரில் மூழ்கினாா். அவரை அக்கம்பக்கத்தினா் தண்ணீருக்குள் இறங்கி தேடினா். இருப்பினும் அவரைக் காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து வந்த ஒத்தக்கடை போலீஸாா் தேடியதில், சின்ன மாங்குளம் பகுதியில் உள்ள பெரியாறு கால்வாய்ப் பகுதியில் அவரது உடல் கண்டறியப்பட்டது. இதையடுத்து, அவரது உடலை கூறாய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.