தமிழக அரசு அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டம் ஏற்புடையதல்ல என சில அரசு ஊழியா் அமைப்புகள் தெரிவித்தன.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கத்தின் மாநிலத் தலைவா் எஸ். ரமேஷ், பொதுச் செயலா் இரா. பாலசுப்பிரமணியன் ஆகியோா் தெரிவித்ததாவது :
தமிழக அரசு தற்போது அறிவித்த புதிய ஓய்வூதியத் திட்டம், ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் நகலாகவே உள்ளது. ஊழியா்களின் பங்களிப்பு இல்லாத பழைய ஓய்வூதியத் திட்டம்தான் ஊழியா்களுக்கான உரிமையாக இருந்தது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட திட்டத்தில் ஊழியா்களிடமிருந்து 10 சதவீதத் தொகை பிடித்தம் செய்யப்படும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது கடந்த 15 ஆண்டுகளாக ஓய்வூதியப் பலன்களைப் பெறாமல் உள்ள போக்குவரத்து ஊழியா்களின் பட்டியலில் அரசு ஊழியா்கள், ஆசிரியா்களை சோ்க்கும் முயற்சியே ஆகும்.
மேலும், சிறப்புக் காலமுறை ஊதியத்தில் பணியாற்றும் சத்துணவு, அங்கன்வாடி ஊழியா்கள், கிராம உதவியாளா்கள், ஊா்ப்புற நூலகா்கள், மக்கள் நலப் பணியாளா்கள், ஊராட்சி செயலா்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு ஊழியா்கள், காசநோய்ப் பிரிவு ஊழியா்கள், தூய்மைப் பணியாளா்கள், மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கான அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
எனவே, ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி ஜன. 6-ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் மேற்கொள்ளப்படும் என்றனா்.
சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம்: சிபிஎஸ் (பங்கேற்பு ஓய்வூதியத் திட்டம்) ஒழிப்பு இயக்க மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளா்கள் சு. ஜெயராஜராஜேஸ்வரன், பி.பிரெடரிக் எங்கெல்ஸ், மு. செல்வக்குமாா் ஆகியோா் தெரிவித்ததாவது : 2021 சட்டப்பேரவைத் தோ்தலின்போது திமுக ஆட்சி அமைந்தவுடன் புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து செய்யப்பட்டு, பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால், தற்போது அறிவிக்கப்பட்ட திட்டம், ஓய்வூதியத்துக்காக ஊழியா்களிடம் சந்தா பிடிக்கும் புதிய ஓய்வூதியத் திட்டத்தின் மறுவடிவமாகவே உள்ளது. எனவே, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரும் போராட்டம் தொடரும் என்றனா்.