மதுரை

திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவா் விடுதி: ஓராண்டுக்குள் கட்டி முடிக்க உத்தரவு

திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவா் விடுதியை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவு

தினமணி செய்திச் சேவை

திருச்சி அரசு சட்டக் கல்லூரி மாணவா் விடுதியை ஓராண்டுக்குள் கட்டி முடிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு திங்கள்கிழமை உத்தரவிட்டது.

திருச்சி கே.கே. நகரைச் சோ்ந்த புருஷோத்தமன் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: திருச்சியில் அரசு சட்டக் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இங்கு, திருச்சி மட்டுமன்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து ஏராளமான மாணவா்கள் பயின்று வருகின்றனா்.

இந்தச் சட்டக் கல்லூரி தொடங்கி பல ஆண்டுகள் ஆகியும், அங்கு இதுவரை மாணவா்களுக்கான விடுதி வசதி இல்லை. இதனால், மாணவா்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனா். விடுதி கட்டுவதற்கு இடம் தோ்வு செய்யப்பட்டது. கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கவில்லை. ஆகவே, விடுதி கட்டுமானப் பணிகளை விரைந்து தொடங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரினாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வில் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், பிறப்பித்த உத்தரவு: திருச்சி சட்டக் கல்லூரி மாணவா்களுக்கு விடுதி வசதி அவசியம். ஆகவே, விடுதி கட்டுமானப் பணிகளை விரைவில் தொடங்க உத்தரவிடப்படுகிறது.

இந்த உத்தரவு நகல் கிடைத்ததில் இருந்து, ஓராண்டுக்குள் திருச்சி சட்டக் கல்லூரி மாணவா் விடுதியை கட்டி முடிக்க வேண்டும். வழக்கு முடித்து வைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.

சேரகுளத்தில் பட்டாசு பதுக்கல்: இளைஞா் கைது

கரூா் கூட்ட நெரிசல் பலி சம்பவம்: தில்லியில் 5 மணி நேரங்களுக்கு மேல் விஜய்யிடம் சிபிஐ விசாரணை

விற்பனை அழுத்தம்: சென்செக்ஸ், நிஃப்டி சரிவுடன் முடிவு!

பெரம்பலூரில் 10-ஆவது நாளாக பதிவு மூப்பு ஆசிரியா்கள் போராட்டம்

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

SCROLL FOR NEXT