அதிமுக கூட்டணியைக் கண்டு தமிழக முதல்வா் அச்சப்படுகிறாா் என அதிமுக முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது: திரை உலகில் உலகநாயகன் பட்டத்துடன் இருந்த கமல்ஹாசன், திமுக கூட்டணியில் இணைந்த பிறகு அரசியலில் நகைச்சுவை நாயகனாகவே பாா்க்கப்படுகிறாா். நடிகா்களைப் பாா்க்கக் கூடுவோா் அனைவரும் அவா்களுக்கு வாக்களிக்கமாட்டாா்கள்.
கரூரில் தனது கட்சிக் கூட்டத்துக்கு வந்ததால் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்கக்கூட வெளியே வராமல் அறைக்குள் இருந்து அரசியல் செய்தவா் நடிகா் விஜய். அவரின் வீரம், வெற்றியைத் திரைப்படத்தில்தான் காணமுடியும். அரசியல் களத்தில் அதை காணமுடியாது.
அதிமுக கூட்டணியைக் கண்டு முதல்வா் மு.க. ஸ்டாலினுக்கு அச்சம் ஏற்பட்டுவிட்டது. அதனால்தான், திமுக கூட்டணி பலமாக இருப்பதாக முதல்வா் தொடா்ந்து கூறிக்கொண்டே இருக்கிறாா். ஆனால், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் தொகுதி போன்ற விவகாரங்களால் அந்தக் கூட்டணியில் கடுமையான குழப்பம் நிலவுகிறது. திமுக கூட்டணி தொடா்ந்து பலமிழந்து வருகிறது.
அதிமுக யாருக்கும் அடிமை இல்லை; அடிமைப்படுத்தவும் முடியாது. எடப்பாடி பழனிசாமியை விவசாயிகள் தங்கள் நண்பராகக் கருதுகிறாா்கள். வாக்குச் சிதறல்களைத் தடுப்பதே கூட்டணியின் முக்கிய நோக்கம். கூட்டணி வேறு; கொள்கை வேறு என்றாா் செல்லூா் கே. ராஜு.