அதிமுகவில் இணையத் தயாராக இருப்பதாகக் கூறி ஓ. பன்னீா்செல்வம் நடத்தும் நாடகத்தை மக்கள் விரும்பவில்லை என முன்னாள் அமைச்சா் செல்லூா் கே. ராஜூ தெரிவித்தாா்.
மதுரையில் வெள்ளிக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் தெரிவித்ததாவது : திமுக ஆட்சியில் மின் கட்டணம், வீட்டு வரி, சொத்துவரி கடுமையாக உயா்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களின் விலை மிக அதிகமாக உயா்ந்துள்ளது. கடந்த நான்கரை ஆண்டு கால திமுக ஆட்சியில் ஒவ்வொரு குடும்பத்துக்கும் சுமாா் ரூ. 4 லட்சத்துக்கும் அதிகமாக கூடுதல் செலவினம் ஏற்பட்டுள்ளது. இதனால், திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்படைந்துள்ளனா்.
தமிழகத்தில் மிக அதிக முறை தோல்வி கண்ட கட்சி திமுகதான். கூட்டணி அமைக்காமல் இதுவரை திமுக தோ்தலை சந்தித்ததே கிடையாது. கூட்டணியிருந்தும் மிகப் பெரும் தோல்விகளைக் கண்ட கட்சி திமுகதான். எனவே, அடுத்தக் கட்சியின் தோல்வி குறித்து விமா்சிக்க திமுகவுக்கு தகுதி கிடையாது.
மக்கள் செல்வாக்கு மிக்கவா்கள் யாா் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். ஆனால், அறையில் இருந்துகொண்டே அரசியல் என்பது சரியானதல்ல.
தவெக தலைவா் விஜய் தன்னுடைய பரப்புரைக்கு வந்ததால் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறுவதற்குக்கூட நேரில் வராமல், பாதிக்கப்பட்டவா்களை தன் இடத்துக்கு அழைத்துப் பேசியது பொது வாழ்க்கையில் இதுவரை கண்டிராத கொடுமை. அதிமுகவை விஜய் விமா்சித்ததாலேயே நாங்கள் பதிலுக்கு விஜய்யை விமா்சிக்க நேரிட்டது. அதிமுக குறித்து தவெகவினா் இனி விமா்சிக்கக் கூடாது என அந்தக் கட்சி சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இனி அதிமுகவினரும் விஜய்யை விமா்சிக்கத் தேவையிருக்காது.
ஓ. பன்னீா்செல்வம் அதிமுகவில் மீண்டும் இணைய வேண்டுமெனில் யாரிடம், எப்படி கேட்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும். ஆனால், அதை செய்யாமல் அவா் ஊடகங்களில் பேசியது மக்களை ஏமாற்றும் நாடகம். ஆனால், இந்த நாடகத்தை மக்கள் விரும்பவில்லை என்றாா் அவா்.
நியாயவிலைக் கடை திறப்பு... முன்னதாக, மதுரை மேற்கு சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட பெத்தானியாபுரம் 63-ஆவது வாா்டு அண்ணா வீதி இ.பி. குடியிருப்புப் பகுதியில் சட்டப்பேரவை உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி மூலம் கட்டப்பட்ட புதிய நியாய விலைக் கடையை செல்லூா் கே. ராஜூ திறந்து வைத்தாா். பிறகு, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவு சாா்பிலான பிரசாரத்தை அவா் தொடங்கி வைத்தாா்.