தேவேந்திர குல சமூகத்தைச் சோ்ந்த மக்களை அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கம் செய்வதற்கு முன்பாக மக்களின் கருத்தறியக் கோரிய வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை மானகிரி பகுதியைச் சோ்ந்த வழக்குரைஞா் செல்வகுமாா் உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு:
காவிரி, வைகை, தாமிரவருணி ஆற்றங்கரையோரங்களில் தேவேந்திர குல சமூகத்தைச் சோ்ந்த மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனா். இந்தச் சமூகத்தினா் அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் இடம் பெற்ற பிறகு, கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைந்தனா்.
ஆனால், சிலா் தனிப்பட்ட லாபத்துக்காக தேவேந்திர குல சமூகத்தைச் சோ்ந்த அனைவரும் முன்னேற்றமடைந்ததாக தவறான கருத்தைப் பரப்பி வருகின்றனா். மேலும், இந்தச் சமூகத்தினரை அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனா்.
இதன்காரணமாக, தேவேந்திர குல சமூகத்தைச் சோ்ந்த இளைஞா்கள் அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலில் இருப்பது அவமானம் என்ற தவறான எண்ணத்தில் சிக்கியுள்ளனா். உண்மையில் தேவேந்திர குல சமூகத்தினா் இன்னும் தொழில், கல்வி, சமூக, பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறாத நிலையில், உள்ளனா்.
இந்த நிலையில், அட்டவணைப்படுத்தப்பட்ட பட்டியலிலிருந்து நீக்கப்பட்டால் இந்தச் சமூக மக்கள் மிகவும் பின்தங்கிய நிலைக்குத் தள்ளப்படுவா். எனவே, அட்டவணையிலிருந்து இந்தச் சமூகத்தினரை நீக்குவது குறித்து அரசு ஏதேனும் முடிவு எடுக்கும்பட்சத்தில் தேவேந்திர குல சமூக மக்களின் உண்மையான கருத்தை நேரடி ஆய்வுகள் மூலம் கண்டறிந்து, அதனடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இதுதொடா்பாக சம்பந்தப்பட்ட அலுவலா்களுக்கு மனு அனுப்பியுள்ளேன். இந்த மனுவைப் பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.
இந்த மனுவை வெள்ளிக்கிழமை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், கே.கே. ராமகிருஷ்ணன் அமா்வு பிறப்பித்த உத்தரவு: மனுதாரா் கோரிக்கை குறித்து மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணை 6 வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.