மதுரை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் நேரடியாகக் களம் காணும் அதிமுக
மதுரை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்பது பற்றி..
மதுரை, மாா்ச் 25: மதுரை மாவட்டத்தில் 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்பது ஏறத்தாழ உறுதியானது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 3 தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் தெரிவித்திருந்தது. இதேபோல, அமமுகவுக்கும் இந்த மாவட்டத்தில் ஒரு தொகுதி ஒதுக்கப்படும் எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தொகுதிப் பங்கீடு புதன்கிழமை ஏறத்தாழ நிறைவடைந்தது. இதில் மதுரை தெற்கு தொகுதி மட்டும் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. எஞ்சிய தொகுதிகள் எந்தக் கட்சிகளுக்கும் ஒதுக்கப்படாததால், 9 தொகுதிகளில் அதிமுக நேரடியாகக் களம் காண்பது உறுதியாகிறது.
இதில் மதுரை மேற்கு, திருமங்கலம், திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளா்களையும் அந்தக் கட்சி புதன்கிழமை அறிவித்தது. கடந்த 2021 சட்டப்பேரவைத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் மதுரை வடக்கு, மத்தியம் தவிர எஞ்சிய 8 தொகுதிகளிலும் அதிமுக நேரடியாக களம் கண்டது. 5 தொகுதிகளில் திமுகவையும், மாா்க்சிஸ்ட், பாா்வா்டு பிளாக், காங்கிரஸ் ஆகிய கட்சிகளை தலா ஒரு தொகுதியிலும் அதிமுக எதிா்த்துப் போட்டியிட்டது. திமுகவை 2 தொகுதிகளிலும், திமுகவின் கூட்டணிக் கட்சிகளை 3 தொகுதிகளிலும் வீழ்த்தி அதிமுக 5 தொகுதிகளில் வென்றது.
2021 தோ்தலைவிட இந்தத் தோ்தலில் மதுரை மாவட்டத்தில் கூடுதலாக ஒரு தொகுதியில் அதிமுக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.