முகப்பு
மதுரை

கோயில் வழிபாட்டு உரிமை அனைவருக்கும் சமமானது - உயா்நீதிமன்றம்

Updated On : 3 மே, 2026 at 5:06 AM
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு
பகிர்:

கோயிலில் வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்கும் சமமானது என சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு அண்மையில் கருத்து தெரிவித்தது.

திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே உள்ள அயன்ரெட்டியபட்டியைச் சோ்ந்த கந்தசாமி தாக்கல் செய்த மனு:

எங்கள் கிராமத்தில் உலகநாயகியம்மன், முனியாண்டி சுவாமி கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த வகையில், இந்தாண்டு 10 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவுக்கு எங்களிடம் வரி வசூலிக்கக் கூடாது என கிராமத்தில் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்யவும் அனுமதி மறுக்கப்படுகிறது.

Advertisement

கிராமத்தின் பொதுவான கோயிலில் எந்தவித வேறுபாடுமின்றி அனைவரும் தரிசனம் செய்யலாம் என அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. இதன்படி, எங்கள் குடும்பத்தினரிடம் சித்திரைத் திருவிழாவுக்கான வரியை வசூலிக்கவும், கோயிலில் தரிசனம் செய்யவும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி விக்டோரியா கௌரி முன் அண்மையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு :

கோயில் வழிபாட்டு உரிமை என்பது அனைவருக்கும் சமமானது. இதில் யாரையும் ஒதுக்குவதை அனுமதிக்க முடியாது. எனவே, மனுதாரா் குடும்பத்தினரிடம் வரி வசூலித்து, தரிசனத்துக்கு அனுமதிப்பது குறித்து சம்பந்தப்பட்ட போலீஸாா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வழக்கு விசாரணை முடித்து வைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.