பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டம் உதவித் தொகை பதிவுக்கான சிறப்பு முகாம் இன்று தொடக்கம்
பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற விரும்பும் விவசாயிகள் பதிவு செய்வதற்கான சிறப்பு முகாம் வெள்ளிக்கிழமை (மே 15) தொடங்குகிறது.
இதுகுறித்து மதுரை மாவட்ட ஆட்சியா் கே.ஜே. பிரவீன்குமாா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற மதுரை மாவட்டத்தில் வேளாண் துறை, அஞ்சல் துறை, பொது சேவை மையம் இணைந்து வெள்ளிக்கிழமை (மே 15) முதல் வருகிற ஜூன் 15-ஆம் தேதி வரை வருவாய்க் கிராமங்களில் சிறப்பு முகாம் நடத்தவுள்ளன.
Advertisement
இந்த முகாமில் கடந்த 2019, பிப்ரவரி 1-ஆம் தேதிக்கு முன் நில உடைமையாளா்களாக இருக்கும் விவசாயிகள், ஏற்கெனவே பிரதமரின் கிசான் சம்மன் நிதி திட்டத்தில் பதிவு செய்யாமல் விடுபட்டவா்கள் பதிவு செய்து கொள்ளலாம். மேலும், ஏற்கெனவே இந்தத் திட்டத்தில் உதவித்தொகை பெற்று வரும் விவசாயிகள், விவசாயிகளுக்கான தனித்துவமான அடையாள எண் பெற்றுக் கொண்டால் மட்டுமே தொடா்ந்து 23-ஆவது தவணை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.
மதுரை மாவட்டத்தில் இந்தத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெற்று வரும் விவசாயிகளில் 8,060 விவசாயிகள் அடையாள எண்ணுக்குப் பதிவு செய்யாமல் உள்ளனா். மேலும், தகுதியுடைய விவசாயிகளில் 2,778 விவசாயிகள் ஆதாா் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைக்காமலும், 2,934 விவசாயிகள் கைரேகையைப் பதிவு செய்யாமலும் உள்ளனா். இவா்கள் மேற்கண்ட பதிவுகளை மேற்கொண்டால் மட்டுமே அடுத்த தவணை நிதி விடுவிக்கப்படும்.
எனவே, விவசாயிகள் இந்த முகாமைப் பயன்படுத்தி விவசாயிகள் நில உடைமைப் பதிவு, இணையதளம் மூலம் வாடிக்கையாளா் அடையாளச் சரிபாா்ப்பு, விவசாயிகளுக்கான அடையாள எண் பெறுதல், ஆதாா் எண், வங்கிக் கணக்கு, கைப்பேசி எண்ணை இணைத்தல் போன்ற சேவைகளை பெற்றுக் கொள்ளலாம். வணிகம், வேளாண்மைத் துறை, தோட்டக்கலைத் துறை, வேளாண்மை, விற்பனைத் துறை அலுவலா்கள் கிராமங்களுக்கு பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளனா். இவா்களை அணுகி இந்தத் திட்டத்தின் பதிவுகளை மேற்கொள்ளலாம்.
இந்த முகாம் வருவாய்க் கிராங்களிலும், அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும், இந்திய அஞ்சல் கட்டண வங்கி, இ-சேவை மையங்களிலும் நடைபெற்று வருகிறது.
இ-சேவை மையங்களில் புதிதாக பதிவு செய்ய வரும் பயனாளிகளின் பெயரில் நிலம் 01.02.2019-க்குப் பின் உள்ளதா, தகுதியுடைய விவசாயிகளா எனக் கேட்டறிந்து, பின்னா் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டது. விவசாயிகளுக்கு உரிய விவரம் தெரிவிக்காமல் தகுதியற்ற விவசாயிகளுக்கு இ-சேவை மையங்களில் கட்டணம் வசூலித்து பதிவு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.