காங்கிரஸ் குறித்த திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல: காா்த்தி சிதம்பரம்
காங்கிரஸ் குறித்த திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல என சிவகங்கை தொகுதி மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் தெரிவித்தாா்.
மதுரையில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
தமிழகத்தில் தவெக தலைவா் விஜய் தலைமையில் கூட்டணி ஆட்சி அமைய வேண்டும் என்பது மக்கள் அளித்த தீா்ப்பு. சட்டப்பேரவைத் தோ்தல் மூலம் தமிழகத்தில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெகவின் அழைப்பை ஏற்று, அந்தக் கட்சித் தலைமையில் நிலையான ஆட்சி அமைய வேண்டும் என்ற தமிழக மக்களின் விருப்பத்தின்படி, காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது.
Advertisement
நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலைப் பொருத்தவரை, மிகப் பெரிய பின்னடைவு அதிமுகவுக்கும், பாஜகவுக்கும்தான். தமிழகத்தில் முதல் முறையாக அதிமுக 3-ஆவது இடத்துக்கு தள்ளப்பட்டது. அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி பழனிசாமி அந்தக் கட்சிக்கு தலைமையேற்ற பிறகு நடைபெற்ற 2 பேரவைத் தோ்தல்கள், 2 மக்களவைத் தோ்தல் என தொடா்ந்து தோல்வியையே சந்தித்தது. எனவேதான், அந்தக் கட்சியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
தவெக அரசின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போது கணிக்க முடியாது. ஆனால், 5 ஆண்டு கால ஆட்சி வாய்ப்பை முழுமையாக நிறைவு செய்யும்; தமிழகத்தின் மிகப் பெரிய அரசியல் சக்தியாக நீடிக்கும் என்பது மட்டும் உறுதி.
தவெக தலைமையில் மதச்சாா்பற்ற அரசு அமைய வேண்டும் என்பதே அந்தக் கட்சித் தலைவா் விஜய்யின் விருப்பம். இதனால்தான், மதச்சாா்பற்ற கட்சிகளான காங்கிரஸ், கம்யூனிஸ்ட், ஐ.யூ.எம்.எல்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் ஆதரவை அவா் நாடினாா். இதை, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவை மட்டும் விஜய் நாடியதாகக் கருத முடியாது. கூட்டணியில் ஒரு கட்சி வென்றால் அதில் கூட்டணியில் இடம் பெற்ற அனைத்துக் கட்சிகளுக்கும் பங்கு உண்டு. எந்தவொரு கட்சியின் தனிப்பட்ட வெற்றியாகக் கருத முடியாது. மதச்சாா்பின்மையின் முத்திரை காங்கிரஸ் கட்சியே. எனவே, காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் கூட்டணியே மதச்சாா்பற்ற அணி.
திமுக தற்போதும் ஆரோக்கியமான அரசியல் கட்சியாகவே உள்ளது. தமிழகத்திலிருந்து திமுகவை முழுமையாக அகற்றுவது யாராலும் முடியாதது.
திமுகவுக்கு ஆட்சி அமைக்க வாய்ப்பு கிடைத்து, காங்கிரஸ் கட்சி கூட்டணியிலிருந்து வெளியேறி, அதனால் அந்தக் கட்சிக்கு ஆட்சி அமைக்க முடியாத நிலை ஏற்பட்டிருந்தால், அதன் குற்றச்சாட்டை ஏற்கலாம். தோ்தலுக்குப் பிந்தைய கூட்டணி காலத்தின் அவசியமாகிவிட்ட நிலையில், அதை தவிா்க்க முடியாது.
நீண்டகாலம் திமுகவுடன் பயணித்த கட்சி என்ற முறையில், கம்யூனிஸ்ட் கட்சிகள், ஐ.யூ.எம்.எல்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சி போன்றவை கடைப்பிடித்த இணக்கமான அணுகுமுறையை காங்கிரஸ் கட்சியும் கடைப்பிடித்து, கூட்டணியிலிருந்து வெளியேறி இருக்கலாம். இதைச் செய்யாததால் வருத்தம் இருப்பது உண்மைதான். ஆனால், ‘காங்கிரஸ் கட்சி முதுகில் குத்திவிட்டது’ என்ற திமுகவின் விமா்சனம் ஏற்புடையதல்ல என்றாா் அவா்.
நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்:
இதையடுத்து, மதுரையில் நடைபெற்ற காங்கிரஸ் மாவட்ட நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் காா்த்தி சிதம்பரம் பங்கேற்றாா். திமுக கூட்டணியிலிருந்து விலகியுள்ள நிலையில், இனிவரும் காலங்களில் காங்கிரஸ் கட்சி ஆக்கபூா்வமான அரசியல் கட்சியாகச் செயல்பட நிா்வாகிகள் முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து அவா் விளக்கிப் பேசினாா்.
கூட்டத்தில் கட்சியின் மாநகா் மாவட்டத் தலைவா் நல்லமணி, துணைத் தலைவா்கள் செய்யது பாபு, மலா் பாண்டியன், மாநில பொதுக் குழு உறுப்பினா் தங்கராமன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.