தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழில் படைப்பாற்றல் மற்றும் பேச்சாற்றலை வளர்க்க கவிதை, கட்டுரை மற்றும் பேச்சுப் போட்டிகள் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டன.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற இப்போட்டிகளில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த 156 மாணவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட அளவிலான இந்த போட்டிகளில் முதல் 2 இடங்களை பெறுவோருக்கு மட்டுமே பரிசுத் தொகை வழங்கப்பட்டு வந்த நிலையில், முதல் முறையாக 3 ஆவது இடத்துக்கு ரூ. 5 ஆயிரம் வீதம் பரிசுத் தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
நறுந்தேனே என்ற தலைப்பில் கவிதைப் போட்டியும், சங்கே முழங்கு என்ற தலைப்பில் கட்டுரைப் போட்டியும், 10 தலைப்புகளில் பேச்சுப் போட்டியும் நடைபெற்றன. இதில் முதல் 3 இடங்களைப் பிடித்த மாணவர்கள் விவரம்:
கவிதைப் போட்டி: சு.ராமதாசு காந்தி (அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, பழனி) ஆ.சிவக்குமார் (புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்), நா.அகில்(அக்ஷயா அகாதெமி, கொசவப்பட்டி, ஒட்டன்சத்திரம்).
கட்டுரைப் போட்டி: இரா.ஹரிஹரன் (புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்), ச.வசுந்திரா தேவி (அண்ணாமலையார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்) ஜா.நேன்சி மரிய ஆன்டோ (சேரன் வித்யாலாயா மெட்ரிக் பள்ளி, சின்னாளப்பட்டி)
பேச்சுப் போட்டி: ச.பூஜாதேவி (புனித வளனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்), லெ.ர.ஸ்ரீமித்ரா (புனித வளனார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்), மோ.ரூபன் (புனித மரியன்னை மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்).
பரிசளிப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் வினய் தலைமை வகித்தார். அப்போது முதலிடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 10 ஆயிரம், 2 ஆம் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ. 7 ஆயிரம் வீதம் பரிசுத்தொகையை ஆட்சியர் வழங்கினார். 3 ஆவது இடத்திற்கான ரூ. 5 ஆயிரம் பரிசுத் தொகை பின்னர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சித் துறை துணை இயக்குநர் பெ.சந்திரா, உள்ளூர் தமிழறிஞர் தமிழ் பெரியசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.