திண்டுக்கல்

தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு  எதிராக விவசாயிகள் போராட்டம்

DIN

வத்தலகுண்டு அருகே அனுமதியின்றி விவசாய நிலங்களில் மின்கோபுரங்கள் அமைக்கும் தனியார் சூரிய மின் உற்பத்தி நிறுவனத்துக்கு எதிராக, விவசாயிகள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர். 
        திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டை அடுத்துள்ள எழுவனம்பட்டி, வெறியப்பன்நாயக்கன்பட்டி, உச்சப்பட்டி, ஆராச்சி, கோட்டார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 800 ஏக்கர் பரப்பில் சூரிய மின் உற்பத்தி செய்யும் தனியார் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இங்கிருந்து நாளொன்றுக்கு 1,200 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
      இந்நிலையில், அங்கு தயாரிக்கப்படும் மின்சாரத்தை  வெளியிடங்களுக்கு கொண்டு செல்வதற்கான வழித்தடத்துக்காக மின்கோபுரம் அமைக்கும் பணிகளை, அந்த நிறுவனம் தொடங்கியுள்ளது. ஏற்கெனவே, 65 மின்கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது எழுவனம்பட்டியைச்  சேர்ந்த விவசாய நிலத்தில் மின் கோபுரம் அமைப்பதற்கான பணிகளை வியாழக்கிழமை தொடங்கியுள்ளனர். இதனை அறிந்த நிலத்தின் உரிமையாளர்களான தாசன் மற்றும் ஜெயராமன் ஆகியோர், குழிகள் தோண்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அவர்களுக்கு ஆதரவாக அந்தப் பகுதியைச் சேர்ந்த மேலும் சில விவசாயிகளும் களம் இறங்கினர். 
      இதனால் அதிர்ச்சி அடைந்த தனியார் நிறுவனத்தினர், வத்தலகுண்டு போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். ஆனால், நிலத்தில் அமர்ந்து விவசாயிகள் போராட்டத்தில்  ஈடுபடத் தொடங்கினர். இதனை அடுத்து, மின்கோபுரம் அமைக்கும் பணிகளை நிறுத்திவிட்டு, தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர்கள் அங்கிருந்து வெளியேறினர்.
      இது குறித்து விவசாயிகள் தரப்பில் கூறியதாவது: மின்கோபுரம் அமைப்பதற்கு தனியார் நிறுவனம் விவசாயிகளிடம் அனுமதி பெறவில்லை. 
கையகப்படுத்தப்படும் நிலங்களுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கவில்லை. வத்தலகுண்டு காவல்துறையினர் உதவியுடன் விவசாயிகளை மிரட்டுகின்றனர். எங்கள் எதிர்ப்பை மீறி கோபுரம் அமைக்க முயன்றால், தொடர் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 2 தோ்வு முடிவுகள்: நாளை வெளியீடு

பாகிஸ்தானில் அதிகாரபூா்வமாக அறிமுகமானது ‘யோகா’!

பத்திரிகையாளா்களின் பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்: ஐ.நா. பொது சபை தலைவா்

இருவேறு சாலை விபத்து: 9 போ் உயிரிழப்பு

நெல்லுக்கடை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT