ஆசிரியர், மாணவர் அலட்சியத்தால் தமிழ் பாட தேர்ச்சி விகிதம் குறைவு: முதன்மைக்கல்வி அலுவலர் குற்றச்சாட்டு
தாய்மொழியாக இருந்தபோதிலும் தமிழ் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
தாய்மொழியாக இருந்தபோதிலும் தமிழ் பாடத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைவதற்கு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என முதன்மை கல்வி அலுவலர் கூறினார்.
திண்டுக்கல் நேருஜி நகரவை மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் உலகத் தமிழ் சங்கம் சார்பில் தமிழாசிரியர்களுக்கான புத்தாக்க பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் பெ.சந்திரா தலைமை வகித்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ச.கோபிதாஸ் முன்னிலை வகித்துப் பேசியது:
தமிழ் பாடத்தில் தான் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் குறைகிறது. தாய்மொழியாக இருந்தபோதிலும், மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களின் அலட்சியம் காரணமாகவே இது தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையை மாற்றுவதற்கு ஆசிரியர்கள் முயற்சிக்க வேண்டும் என்றார்.
சிறப்பு அழைப்பாளராக காந்தி கிராம கிராமியப் பல்கலைக் கழக தமிழ்த்துறைத் தலைவர் பா.ஆனந்தகுமார் கலந்து கொண்டு பேசியதாவது:
பண்பாட்டு கருவூலமாக விளங்குவது மொழிகள். இனப் படுகொலைக்கு இணையாக, மொழி படுகொலைகளும் நிகழ்ந்து வருகின்றன. உலகம் முழுவதும் 2500 மொழிகள் ஆபத்தில் உள்ளதாக யுனெஸ்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் ஹிந்தி மொழியின் வளர்ச்சிக்காக 50 மொழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
அதேபோல் உலகம் முழுவதும் ஆங்கில மொழியின் தாக்கத்தால் பல்வேறு மொழிகள் ஒழிக்கப்பட்டு வருகின்றன. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக அழிவின் விழிம்பில் உள்ளதாக பட்டியலிப்பட்ட 43 சதவீத மொழிகளில், தமிழும் இடம் பெற்றிருந்தது.
இன்றைக்கு அந்த நிலையிலிருந்து தமிழ் மீண்டுள்ளது. 1990-இல் நவீன தொழில்நுட்ப வளர்ச்சியால் அச்சு வடிவ புத்தகங்கள் அழிந்து விடும் என கணக்கிடப்பட்டது.
ஆனால், அந்த கணிப்பு பொய்யாக்கப்பட்டு இலக்கியங்கள் வளர்ச்சி அடைந்துள்ளன.
உலக அளவில் செம்மொழி பட்டியலில் உள்ள 6 மொழிகளில், தமிழ் மற்றும் சீன மொழிகள் மட்டுமே தொடர்ச்சியும், நீட்சியும் பெற்றுள்ளன. பிற மொழிகள் அருங்காட்சியகத்தில் காட்சிப் பொருளாக மட்டுமே உள்ளன.
நிகழ்ச்சியில் சாகித்ய அகாதெமி விருது பெற்ற எழுத்தாளர் தா.செல்வராஜ், உள்ளூர் தமிழறிஞர் துரை தில்லான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.