தலைமைக் காவலர் மீது தாக்குதல்: நாம் தமிழர் கட்சி நிர்வாகி உள்பட இருவர் கைது
வத்தலகுண்டு அருகே தலைமைக் காவலரை தாக்கிய நாம்தமிழர் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
வத்தலகுண்டு அருகே தலைமைக் காவலரை தாக்கிய நாம்தமிழர் கட்சி நிர்வாகி உள்ளிட்ட இருவரை, போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சேர்ந்தவர் தீனதயாளன்(54). அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ்(38), அகஸ்டின்(52), பிரசன்னா(28), சுரேஷ்(25). இதில் ரமேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் மருந்தாளுநராக பணிபுரிந்து வருகிறார். பிரசன்னா, நாம் தமிழர் கட்சியின் ஆத்தூர் பகுதி நிர்வாகியாக உள்ளார்.
வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலக குறுக்குச் சாலையில் உள்ள மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தீனதயாளன் உள்ளிட்ட 5 பேரும் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்த பின்னும், 5 பேரும் மண்டபத்தில் இருந்துள்ளனர். இதனிடையே, காலியான தண்ணீர் கேன்களை திரும்ப எடுத்துச் செல்வதற்காக வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த அன்சாரி(25) வந்துள்ளார். அப்போது 5 பேருக்கும், அன்சாரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து, வத்தலகுண்டு பகுதியைச் சேர்ந்த ஜெய்லானி(28), அசோக்(30) ஆகியோருக்கு அன்சாரி தகவல் கொடுத்து உதவிக்கு அழைத்துள்ளார். இதனால் திருமண மண்டபத்தில் இரு தரப்பினரும் மோதியுள்ளனர். அப்போது, தீனதயாளன், ரமேஷ், அன்சாரி ஆகியோர் காயமடைந்துள்ளனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பட்டிவீரன்பட்டி தலைமைக் காவலர் சங்கரலிங்கம் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார். காலதாமதமாக வந்த தலைமைக் காவலரிடம், பிரசன்னா, சுரேஷ் ஆகியோர் வாக்குவாதம் செய்துள்ளனர்.
பின்னர், சங்கரலிங்கத்தை கீழே தள்ளிவிட்டதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக பட்டிவீரன்பட்டி காவல் நிலையத்தில் சங்கரலிங்கம் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் 8 பேர் மீது வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரசன்னா மற்றும் சுரேஷ் ஆகியோரைக் கைது செய்தனர்.