முகப்பு
திண்டுக்கல்

பழனியில் தனியார் காய்கறி சந்தையை மூட உத்தரவு

பழனியில் நகராட்சி நிர்வாகத்துக்கு முறையாக வரி செலுத்தாமல் நடத்தப்பட்டு வரும் தனியார் காய்கறி சந்தையை மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Updated On : 9 ஜூலை, 2018 at 7:06 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 9:40 PM

பழனியில் நகராட்சி நிர்வாகத்துக்கு முறையாக வரி செலுத்தாமல் நடத்தப்பட்டு வரும் தனியார் காய்கறி சந்தையை மூட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 
திண்டுக்கல் மாவட்டம், பழனி இட்டேரி சாலையில் நகராட்சி சார்பில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் காய்கறி சந்தை செயல்பட்டு வந்தது. இங்கு, தினமும் நூற்றுக்கணக்கான விவசாயிகள் தங்களது விளைபொருள்களை கொண்டு வந்து வியாபாரம் செய்து வந்தனர். 
இந் நிலையில், பராமரிப்புப் பணி காரணமாக இந்த சந்தை தற்காலிகமாக மூடப்பட்டது. எனவே, தனியார் இடத்தில் காய்கறி கடை நடத்த அனுமதிக்கப்பட்டது. அதன்பேரில், நகரின் மத்தியில் முஸ்லிம் அறக்கட்டளைக்குச் சொந்தமான இடத்தில் இந்தக் கடைகள் திறக்கப்பட்டன. 
அதன்பின்னர், பராமரிப்புப் பணிகள் முடிந்து நகராட்சி காய்கறி சந்தை திறக்கப்பட்டும், தனியார் இடத்திலிருந்து கடைகள் இடம் மாறவில்லை. இதனால், நகராட்சி காய்கறி சந்தையில் இருந்த 25 கடைகளில் 3 கடைகள் மட்டுமே தற்போது இயங்கி வருகின்றன. இது, நகராட்சிக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும், நகராட்சி நிர்வாகத்துக்கு தனியார் காய்கறி சந்தை நிர்வாகம் கட்டணம் செலுத்தவில்லை என்பதாலும், தனியார் இடத்தில் இயங்கும் சந்தைக்கு தடை விதிக்கக் கோரி, நகராட்சி நிர்வாகம் நீதிமன்றத்தை நாடியது. இதற்கு தடை கோரி, தனியார் சந்தை நிர்வாகிகளும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர்.
பல்வேறு கட்ட விசாரணைகளின் முடிவில், சென்னை உயர் நீதிமன்றம் தனியார் சந்தையிலுள்ள கடைகளுக்கு சீலிடுமாறு நகராட்சிக்கு உத்தரவிட்டது. அதன்படி, நகராட்சி நிர்வாக அரசு செயலரும்  தனியார் சந்தை கடைகளை அடைக்க உத்தரவிட்டார். 
எனவே, செவ்வாய்க்கிழமை (ஜூலை 10) தனியார் சந்தை கடைகளுக்கு நகராட்சி நிர்வாகம் சீலிட உள்ளதால், வியாபாரிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.