சின்னமனூரில் நிலம் விற்பனை மோசடி வழக்கில் ஒருவர் கைது
சின்னமனூரில் பவர் பத்திரம் மூலம் நிலத்தை விற்று பணம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை வியாழக்கிழமை நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சின்னமனூரில் பவர் பத்திரம் மூலம் நிலத்தை விற்று பணம் மோசடி செய்த வழக்கில் ஒருவரை வியாழக்கிழமை நிலஅபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
சின்னமனூரைச் சேர்ந்தவர் பேயாண்டித்தேவர் மகன் பாண்டியன். இவர், அதே ஊரைச் சேர்ந்த சுப்பையா மகன் தங்கவேல் என்பவருக்குச் சொந்தமான ஏழரை சென்ட் பரப்பளவுள்ள காலி மனையிடத்தை, அவரது ஜெனரல் பவர் ஏஜென்டான சின்னமனூரைச் சேர்ந்த திருப்பதி மகன் இளங்கோவன் மூலம் கடந்த 2011, பிப்.17-ம் தேதி தனது மனைவியின் பெயரில் ரூ.9 லட்சத்திற்கு கிரையம் பெற்றாராம்.
இந்த இடத்திற்கு கிரையப் பத்திரம் பதிவு செய்த சில நாட்களுக்குப் பின்பு, அது நீதிமன்ற தீர்ப்பின்படி ஏற்கனவே வேறு ஒருவருக்குச் சொந்தமான இடம் என்று தெரிய வந்துள்ளது. தங்கவேல், இளங்கோவன் ஆகியோர் மோசடியாக ரூ.9 லட்சம் பெற்றுக் கொண்டு இடத்தை பத்திரம் பதிவு செய்து கொடுத்ததாக பாண்டியன் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கேட்டதற்கு, இளங்கோவன் தனக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன் உத்தரவின் பேரில், இந்தப் புகாரின் மீது நில அபகரிப்பு தடுப்பு பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தங்கவேலை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள இளங்கோவனை தேடி வருவதாக போலீஸார் தெரிவித்தனர்.