தாடிக்கொம்பு அருகே 3 கார்கள் அடுத்தடுத்து மோதல்: அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் சாவு
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு அருகே 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை கடந்து சென்ற கார், எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியதில், கோவையைச் சேர்ந்த அரசுப்
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு அருகே 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை கடந்து சென்ற கார், எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியதில், கோவையைச் சேர்ந்த அரசுப் போக்குவரத்துக் கழக மேலாளர் திங்கள்கிழமை உயிரிழந்தார்.
மதுரை வில்லாபுரம் பகுதியைச் சேர்ந்த சேக் அப்துல்லா என்பவரின் மகன் ரணீஷ் (19). வியாபாரம் நிமித்தமாக கரூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். அந்த காரை சம்சுதீன் (40), என்பவர் ஓட்டி வந்துள்ளார். அதே காரில் மொத்தம் 4 பேர் பயணம் செய்துள்ளனர். அந்த கார், திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு பூதிபுரம் பகுதியில் சென்றபோது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, 4 வழிச்சாலையின் நடுவில் உள்ள தடுப்புச் சுவரை கடந்து எதிர்திசையில் வந்த 2 கார்கள் மீது மோதியது.
இதில் கரூரிலிருந்து திண்டுக்கல் நோக்கி முதலாவதாக வந்த காரில், தூத்துக்குடி மாவட்ட அதிமுக விவசாய அணி செயலர் ராமச்சந்திரன் என்பவரின் மகள் சரண்யா, அவரது கணவர் ரவிச்சந்திரன், தங்கை சந்தியா உள்பட 2 குழந்தைகள் வந்தனர். இவர்கள் தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூவின் உறவினர்கள் எனக் கூறப்படுகிறது.
இந்த 2 கார்களும், மற்றொரு காரின் மீது மோதின. அந்த காரில், தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின், கோவை ஒண்டிப்புதூர் கிளையின் மேலாளர் ஜெயசந்திரன் (50) உள்பட 4 பேர் வந்துள்ளனர். இதில், பலத்த காயமடைந்த ஜெயச்சந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த 11 பேரில், 4 பேர் திண்டுக்கல்லில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், 7 பேர் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.