வத்தலகுண்டுவில் கூட்டுறவு சங்கச் செயலர் வீட்டில் 32 பவுன் நகை, பணம் திருட்டு
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் கூட்டுறவு சங்கச் செயலர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 32 பவுன் நகை மற்றும் ரூ.25
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டுவில் கூட்டுறவு சங்கச் செயலர் ஞாயிற்றுக்கிழமை குடும்பத்தினருடன் தூங்கிக் கொண்டிருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் 32 பவுன் நகை மற்றும் ரூ.25 ஆயிரம் பணத்தை திருடிச் சென்றனர்.
வத்தலகுண்டு ஊர்காலசுவாமி கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜி.சின்னச்சாமி (48). சித்தையன்கோட்டை கூட்டுறவு ஊராட்சி ஒன்றிய பணியாளர்கள் சிக்கன நாணய சங்கத்தில் செயலராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தேன்மொழி. தொடக்கப் பள்ளி ஆசிரியை. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தினருடன் சின்னச்சாமி வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தாராம். அப்போது வீட்டின் மாடி வழியாக உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 32 பவுன் நகை, ரூ.25ஆயிரம் பணம் ஆகியவற்றை திருடிச் சென்று விட்டனராம். திங்கள்கிழமை அதிகாலையில் எழுந்த சின்னச்சாமிக்கு பீரோவிலிருந்த நகை மற்றும் பணம் திருடு போனது தெரியவந்தது.
இதுகுறித்து வத்தலகுண்டு காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் பேரில், தடயவியல் நிபுணர் மற்றும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. மேலும், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமிரா பதிவுகளையும் போலீஸார் ஆய்வு செய்து வருகின்றனர்.