முகப்பு
திண்டுக்கல்

2 துறைகளில் யார் பொறுப்பு: அதிகாரிகளின் போட்டியால் மனுக்களின் மீது நடவடிக்கை இல்லை

பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டியது யார் பொறுப்பு என்பதில் 2 துறைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியால், கடந்த 2 மாதங்களாக 3 பிரச்னைகளுக்கு நடவடிக்கை

Updated On : 15 மே, 2018 at 12:36 AM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

பொதுமக்கள் அளித்துள்ள மனுக்களுக்கு தீர்வு ஏற்படுத்த வேண்டியது யார் பொறுப்பு என்பதில் 2 துறைகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள போட்டியால், கடந்த 2 மாதங்களாக 3 பிரச்னைகளுக்கு நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதை திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தின் போது ஆட்சியர் கண்டித்தார்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்துக்கு ஆட்சியர் டி.ஜி.வினய் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் பா.வேலு முன்னிலை வகித்தார்.
கூட்டம் தொடங்கியதும் நிலுவையில் உள்ள மனுக்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. அப்போது தொப்பம்பட்டி வட்டாரம் பொருளூர் கிராமத்தில் உள்ள கரிசல் குளம் மற்றும் வரத்து வாய்க்கால் தூர்வாருவது தொடர்பாக அளிக்கப்பட்ட மனு குறித்து கேள்வி எழுந்தது. இந்த பணி வட்டார வளர்ச்சித்துறையினுடையது என்று பொதுப்பணித்துறையினரும், பொதுப்பணித்துறையினர் பொறுப்பு என வட்டார வளர்ச்சித்துறையினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டியதால், கடந்த 2 மாதங்களாக முடிவுக்கு வராமல் இருந்து வருகிறது.
இதையடுத்து ஆட்சியர், இதனை முன்னதாக தெரிவித்திருந்தால் யார் மேற்கொள்ள வேண்டிய பணி என்பது குறித்து ஒரு முடிவுக்கு வந்திருக்கலாம். 2 மாதங்கள் காத்திருக்க வேண்டியதில்லை என கண்டித்தார்.
அதேபோல், கொடைக்கானல் மூஞ்சிக்கல் அருகே குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி செயல்படும் 3 விடுதிகள் குறித்தும், இதனால் பொதுமக்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் குறித்தும் அளிக்கப்பட்ட மனுவின் மீதும், நகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகம் சார்பில், தங்கள் பொறுப்பில்லை என கூறி நடவடிக்கை எடுக்காமல் இருந்து வருகின்றனர்.
மேலும், திண்டுக்கல் அடுத்துள்ள பள்ளப்பட்டி பிரிவு பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டக் குழாயிலிருந்து மோட்டார் மூலம் தண்ணீரை உறிஞ்சி, லாரிகளில் விற்பனை செய்வதாக அளிக்கப்பட்ட புகாரிலும், நடவடிக்கை எடுக்க வேண்டியது தங்கள் பொறுப்பல்ல என வட்டார வளர்ச்சி அலுவலகம் மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருவதாகவும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரச்னைகளை தீர்ப்பது எந்த துறையின் பொறுப்பு என்பதில் தொடர்ந்து இழுபறி நீடிப்பதால், கடந்த 48 நாள்களுக்கும் மேலாக இந்த மனுக்களுக்கு பதில் அளிக்காமல் காலம் கடத்தப்படுவதாக தெரிவித்த மாவட்ட வருவாய் அலுவலர் வேலு, ஓரிரு நாள்களில் நடவடிக்கை மேற்கொண்டு உரிய பதிலை மனுதாரர்களுக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.