திண்டுக்கல்

 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினியில் பதிவேற்றம்: முதன்மை செயலர் தென்காசி சு.ஜவஹர்

DIN

தமிழக அரசின் கீழ் பணிபுரியும் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடு கணினி மயமாக்கப்பட்டு வருவதாக முதன்மை செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு ஜவஹர் தெரிவித்தார். 
 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் குறித்து, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அரசு பணியாளர்களுக்கான திறனூட்டல் கூட்டம் இங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் முன்னிலை வகித்தார். முதன்மைச் செயலரும், கருவூலம் மற்றும் கணக்குத்துறை ஆணையருமான தென்காசி சு ஜவஹர் தலைமை வகித்து பேசியதாவது: 
 ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.288.91 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம், பல்வேறு அரசுத் துறைகளைச் சேர்ந்த  சுமார்  29,000  சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்கள், நேரடி இணையம் மூலம் கால தாமதமின்றி கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்க முடியும். 
 தற்போதைய நடைமுறைப்படி, கருவூலத்தில் பட்டியல் சமர்ப்பிக்கப்பட்ட 10 நாள்களுக்குப் பின்னரே, அதற்கான தொகை பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. ஒருங்கிணைந்த நிதி மேலாண்மைத் திட்டம் பயன்பாட்டுக்கு வந்தால், பட்டியல்கள் சமர்ப்பிக்கப்பட்ட நாளிலேயே வங்கிக் கணக்கில் இந்திய ரிசர்வ் வங்கியின் இ-குபேர் வசதி மூலம் தீர்வு செய்ய இயலும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசுப் பணியாளர்களின் பணிப்பதிவேடு பராமரிப்பு எளிய முறையில் கணினி மயமாக்கப்படுகிறது. 
 அதன் பின்னர், அனைத்துப் பணியாளர்களும் அவரவர் பணிப்பதிவேட்டினை கணினி மற்றும் செல்லிடப்பேசி செயலியிலும் தங்களுக்கான கடவுச்சொற்களைப் பயன்படுத்தி அறிந்து கொள்ள முடியும். அதேபோல், பணியாளரின் பணிப்பதிவேட்டில் ஏற்படும் தவறான பதிவுகளை சுயசேவை என்ற முறையைப் பயன்படுத்தி கணினி வாயிலாக உரிய அலுவலருக்கு விண்ணப்பித்து சரி செய்து கொள்ளலாம். மேலும், நினைவூட்டுத் தகவல்களின் மூலம் ஆண்டு ஊதிய உயர்வு, விடுப்பு ஒப்படைப்பு ஆகியவற்றுக்கான பணப் பலன்களை பணியாளர்கள் உரிய நேரத்தில் பெறலாம் என்றார்.  
  இக்கூட்டத்தில் பழனி சார் ஆட்சியர் எஸ்.அருண்ராஜ், மாவட்ட வன அலுவலர் எஸ்.என்.தேஜஸ்வி,  கருவூலம் மற்றும் கணக்குத்துறை கூடுதல் இயக்குநர் ஏ.பி.மகாபாரதி, இணை இயக்குநர் மூ.தவசுகனி(மதுரை), கருவூல அலுவலர் க.சரவணன் (திண்டுக்கல்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிர்ச்சியளிக்கும் அல்லு அர்ஜுன் சம்பளம்!

காங். ஆட்சியில் தாலிக்கயிறுக்குக் கூட பாதுகாப்பில்லை -பிரதமர் மோடி கடும் தாக்கு

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

SCROLL FOR NEXT