திண்டுக்கல்

மக்களுக்கு மதிப்பளிக்காத கட்சிகளை ஏன் ஆதரிக்க வேண்டும்: சீமான் கேள்வி

DIN

மக்களின் உயிருக்கும், உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காத கட்சிகளை ஏன் ஆதரிக்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பினார்.
திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் அக் கட்சியின் வேட்பாளர் மன்சூர் அலிகான் மற்றும் நிலக்கோட்டை சட்டப்பேரவை இடைத் தேர்தலில் போட்டியிடும் அக்கட்சியின் வேட்பாளர் சங்கிலிபாண்டி ஆகியோரை ஆதரித்து புதன்கிழமை  திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நடைபெற்ற கூட்டத்தில் அவர் பேசியது: 
தமிழகத்தின் பிரதான கட்சிகள் மட்டுமின்றி, தேசிய கட்சிகளும் கூட்டணி அமைத்து தேர்தல் களத்தை சந்திக்கின்றன. அதே நேரத்தில், நாம் தமிழர் கட்சி தனித்து களம் காண்கிறது. தமிழ் மக்களை நம்பி நாங்கள் தனித்து நிற்கிறோம். தமிழ் நிலம் குற்றச் சமூகமாக மாறிவிட்ட நிலையில், ஊழலும் லஞ்சமும் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. தொழில் வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் தொழிலை அழித்துக் கொண்டிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சியை மக்கள் ஆதரித்தால், படித்தவனுக்கு மட்டுமே கிடைத்து வரும் அரசு வேலை, படிக்காதவனுக்கும் கிடைக்கும். அதற்காக வேளாண்மைத் தொழிலை அரசு வேலையாக மாற்றுவோம். 
இதுவரை மக்களுக்கு அநீதி செய்தவர்களே, மீண்டும் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்கள். 50 ஆண்டு கால ஆட்சியில் காங்கிரஸ் செய்யாததை, கடந்த 5 ஆண்டுகளில் பாஜக செய்யாததை, இனி ஆட்சிக்கு வந்து எப்படி செய்வார்கள். நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என அறிக்கை வெளியிட்டுள்ள காங்கிரஸ் தான், அதை அறிமுகப்படுத்தியது. டிஜிட்டல் இந்தியா, சுத்தமான  இந்தியா என்ற கோஷங்களை மோடி முன் வைக்கிறார். இதற்கு மாற்றாக லஞ்சம், ஊழல் இல்லாத தேசமே மக்களின் விருப்பம். 
நாட்டிலேயே 18 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய ஆட்சிப் பொறுப்பில் இருந்த கட்சி திமுக. அப்போது செய்யாத திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளில் நிறைவேற்றுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம். அனைத்து மக்களுக்கும் சமமான, தரமான, கல்வி மற்றும் மருத்துவ வசதி கிடைக்க வேண்டும். அரசை நடத்துபவர்கள், அரசுப் பள்ளி மற்றும் மருத்துவமனைகள் மீது நம்பிக்கை இல்லாமல் தனியாரிடம் சென்றால், மக்களுக்கு எப்படி நம்பிக்கை வரும். 
மக்களின் உயிருக்கும், உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளிக்காத கட்சிகளுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும். மக்களும், நாடும் வளம் பெற நாம் தமிழர் கட்சி வேட்பாளரை இந்த முறை மக்கள் ஆதரிக்க வேண்டும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

ஆவடி அருகே படுகொலை: வட மாநில இளைஞரின் அதிர்ச்சியூட்டும் வாக்குமூலம்

SCROLL FOR NEXT