திண்டுக்கல்

மக்களவை கன்னிப் பேச்சில் ரயில்வே பிரச்னைகளுக்கு முக்கியத்துவம்  அளிப்பாரா திண்டுக்கல் புதிய எம்.பி.?

மக்களவைக்கு திண்டுக்கல் தொகுதியிலிருந்து 39 ஆண்டுகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ள

DIN

மக்களவைக்கு திண்டுக்கல் தொகுதியிலிருந்து 39 ஆண்டுகளுக்கு பின் தேர்வு செய்யப்பட்டுள்ள திமுக எம்பி வேலுச்சாமி, மக்களவையில் தனது கன்னிப் பேச்சில் ரயில்வே பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளித்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
தென்மாவட்டங்களில், மதுரைக்கு அடுத்த பெரிய ரயில் நிலையமாக திண்டுக்கல் சந்திப்பு அமைந்துள்ளது. நாள்தோறும் சுமார் 80-க்கும் மேற்பட்ட ரயில்கள் திண்டுக்கல் சந்திப்பு நிலையத்தை கடந்து செல்கின்றன. 
மேலும், பழனி, கரூர், திருச்சி என 3 மார்க்கமாக செல்லும் ரயில் பாதை, திண்டுக்கல்லிலிருந்து தனித்தனியாக பிரிவதாலும் இந்த ரயில் நிலையம் முக்கியத்துவம் பெறுகிறது. 
இதுபோன்ற சூழலில், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மக்கள் ரயில்வே நிர்வாகத்தின் நிர்வாக திறமையின்மையால், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகின்றனர். குறிப்பாக தமிழகத்தின் பிரதான காய்கறிச் சந்தையாக ஒட்டன்சத்திரம் செயல்பட்டு வருகிறது. 
அமிர்தா விரைவு ரயில்: ஒட்டன்சத்திரத்திலிருந்து கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு நாள்தோறும் 400 முதல் 500 டன் காய்கறிகள் லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன. ஆனால் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் சரக்குகளை பதிவு செய்வதற்கான வசதியில்லாததால், கடந்த பல ஆண்டுகளாக விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
அதேபோல், மதுரையிலிருந்து பழனி, பொள்ளாச்சி, பாலக்காடு வழியாக திருவனந்தபுரம் வரை செல்லும் அமிர்தா விரைவு ரயில் ஒட்டன்சத்திரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்படுவதில்லை. இதனால் ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
தேஜஸ் விரைவு ரயில்: மதுரை - சென்னை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில், கொடைரோடு ரயில் நிலையத்தில் மட்டுமே நின்று செல்வதால், திண்டுக்கல் மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளைச் சேர்ந்த பயணிகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். 
திண்டுக்கல்லில் கிழக்கு நுழைவுவாயில் தேவை: திண்டுக்கல் ரயில் நிலையத்தில் ஒரு நுழைவு வாயில்(மேற்கு) மட்டுமே இருப்பதால், கூட்ட நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு தீர்வு காணும் வகையில், ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதியில் புதிய நுழைவு வாயில் அமைப்பதோடு, அங்கு பயணச்சீட்டு வழங்குமிடத்தையும் உருவாக்க வேண்டும். 
மேலும், முதல் மற்றும் 2ஆவது நடைமேடைக்கு மட்டுமே அமைக்கப்பட்டுள்ள சுரங்கப் பாதையை, 4ஆவது நடைமேடை வரை நீட்டித்தால் பயனுள்ளதாக இருக்கும். 
திண்டுக்கல் மக்களவை உறுப்பினராக இருந்த என்.எஸ்.வி.சித்தனுக்கு பின்னர், கடந்த 5 ஆண்டுகளாக ரயில்வே வளர்ச்சிப் பணிகள் சொல்லிக் கொள்ளும் வகையில் நடைபெறவில்லை என்பதே பொதுமக்களின் குற்றச்சாட்டாக உள்ளது.
இந்நிலையில், திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் 39 ஆண்டுகளுக்கு பிறகு வெற்றிப் பெற்றுள்ள திமுக எம்பி வேலுச்சாமி, மக்களவையில் தனது கன்னிப் பேச்சில் ரயில்வே பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. 
ஒட்டன்சத்திரம் பகுதியைச் சேர்ந்த எம்பி வேலுச்சாமி, அமிர்தா விரைவு ரயிலுக்கு ஒட்டன்சத்திரத்திலும், தேஜஸ் ரயிலுக்கு திண்டுக்கல்லிலும் நிறுத்தம் பெற்றுக் கொடுப்பதோடு, ஒட்டன்சத்திரத்திலிருந்து ரயில் மூலம் காய்கறி ஏற்றுவதற்கான வாய்ப்பினையும் முதல்கட்டமாக உருவாக்கி கொடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் ஹிட் படங்கள்!

தில்லி கார் குண்டுவெடிப்பு! 9-வது குற்றவாளிக்கு டிச. 26 வரை என்ஐஏ காவல்!

அதிமுகவை மறைமுகமாக விமர்சித்த விஜய் | செய்திகள்: சில வரிகளில் | 18.12.25

பயணிகள் கவனிக்க... பாசஞ்சர் ரயில்களுக்கான எண்கள் மாற்றம்! ஜனவரி 1 முதல்.!

புதிய ஊரக வேலைத் திட்டத்துக்கு எதிர்ப்பு! பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

SCROLL FOR NEXT