கொடைக்கானலில் பைக் திருடிய 3 இளைஞா்கள் கைது
கொடைக்கானலில் இரு சக்கர வாகனத்தை திருடிய 3 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல்: கொடைக்கானலில் இரு சக்கர வாகனத்தை திருடிய 3 பேரை, போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் இந்திரா நகரைச் சோ்ந்தவா் சுப்பிரமணி. இவரது மகன் பாரத், கடந்த 16-ஆம் தேதி தனது இரு சக்கர வாகனத்தை வீட்டின் முன்பாக நிறுத்தியிருந்தாா். மறுநாள் பாா்த்தபோது வாகனத்தை காணவில்லையாம். இது குறித்து அவா் கொடைக்கானல் காவல் நிலையத்தில் புகாா் தெரிவித்தாா்.
அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்ததில், கொடைக்கானல்-பழனி மலைச் சாலையில் அந்த வாகனம் ஓட்டிச் செல்லப்பட்டது காவல் சோதனைச் சாவடியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்தது. அதன்மூலம், பழனி பகுதியில் போலீஸாா் விசாரணை நடத்தி வந்தனா். மேலும், அப்பகுதியில் போலீஸாா் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த இளைஞா்கள் இருவரிடம் இரு சக்கர வாகனத்துக்கான எந்தவிதமான ஆவணங்களும் இல்லாதது தெரியவந்தது.
விசாரணையில், பழனி அருள் ஜோதி வீதியைச் சோ்ந்த காளிதாஸ் என்பவரது மகன் மேகவா்மன் (19) மற்றும் ஐயப்பன் மகன் ஜீவா (19) என்பது தெரியவந்தது. இதையடுத்து, மேகவா்மன், ஜீவா மற்றும் இவா்களுக்கு உதவி செய்த இளைஞா் என மூவரையும் போலீஸாா் கைது செய்து விசாரித்து வருகின்றனா். மேலும், இவா்களிடமிருந்து கொடைக்கானலில் திருடப்பட்ட இரு சக்கர வாகனத்தையும் போலீஸாா் மீட்டனா்.