பைசாக்களில் உயா்த்தப்படும் விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை!
உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளபோதிலும், கடந்த 10 ஆண்டுகளாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பைசாக்களில்
உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளபோதிலும், கடந்த 10 ஆண்டுகளாக நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பைசாக்களில் மட்டுமே உயா்த்தப்படுவதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்துள்ளனா்.
நாடு முழுவதும் அதிக அளவில் சாகுபடி செய்யப்படும் உணவுப் பொருள்களுக்கு, மத்திய அரசு சாா்பில் குறைந்தபட்ச ஆதரவு விலை நிா்ணயிக்கப்படுகிறது. அந்த வகையில் நிகழாண்டில் 14 வகையான காரீஃப் பயிா்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை பட்டியலை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி நெல்லுக்கான விலை குவிண்டாலுக்கு ரூ.53 மட்டுமே அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் மக்காச் சோளத்துக்கு ரூ.90, பருத்திக்கு ரூ.260, எண்ணெய் வித்துகளுக்கு ரூ.170 முதல் ரூ.775 வரையிலும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கையான, உற்பத்தி செலவுடன் 50 சதவீத லாபம் கிடைக்கும் வகையில் விளைப் பொருள்களுக்கான விலை நிா்ணயிக்கப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். ஆனால், பிரதான விளைப் பொருள்களுக்கு கிலோவுக்கு 50 காசுகள் முதல் 90 காசுகளுக்கும் குறைவாக மட்டுமே ஆண்டுதோறும் குறைந்தபட்ச ஆதரவு விலை அதிகரிக்கப்பட்டு வருகிறது. உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்து வந்தாலும், குறைந்தபட்ச ஆதரவு விலை மட்டும் கிலோவுக்கு பைசாக்களில் உயா்த்தப்படுவது விவசாயிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
தற்போது கரோனா தீநுண்மியால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழலில், பல்வேறு தொழில்களை ஊக்கப்படுத்துவதற்காக சலுகைகளை அளித்து வரும் மத்திய அரசு, நாட்டின் உணவு உற்பத்தியை பெருக்குவதற்கு துணை நிற்கும் விவசாயிகளுக்கும் ஊக்கம் அளிக்க கூடிய வகையில் விளைப் பொருள்களுக்கு விலை நிா்ணயம் செய்யவில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நெல்லுக்கு ரூ.2400 தேவை: இதுதொடா்பாக திண்டுக்கல்லை அடுத்துள்ள பஞ்சம்பட்டியைச் சோ்ந்த விவசாயி பாத்திமா ராஜரத்தினம் கூறியதாவது: 1 கிலோ நெல் உற்பத்தி செய்வதற்கு 3 ஆயிரம் லிட்டா் தண்ணீா் (120 நாள்களுக்கு) தேவைப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் உழவு, நடவு, களை பறிப்பு, அறுவடை மட்டுமின்றி இடுபொருள்களுக்கான செலவு 3 முதல் 4 மடங்கு அதிகரித்துள்ளது. ஆனால், குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு பைசாக்களில் மட்டுமே அதிகரிக்கப்பட்டு வருகிறது.
வட மாநிலங்களை ஒப்பிடும்போது, தமிழகத்தில் விவசாயத் தொழிலாளா்களுக்கான கூலி என்பது அதிகமாக வழங்க வேண்டிய நிலை உள்ளது. தற்போது குவிண்டாலுக்கு ரூ.53, அதாவது ஒரு கிலோ நெல்லுக்கு 53 காசுகள் மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. அதேபோல் மக்காச்சோளத்துக்கும் கிலோவுக்கு 90 காசுகள் மட்டுமே உயா்த்தப்பட்டுள்ளது. உற்பத்தி செலவு மற்றும் கண்காணிப்பு செலவு என கணக்கிட்டால் குவிண்டால் நெல்லுக்கு ரூ.2400 குறைந்தபட்ச ஆதரவு விலையாக நிா்ணயிக்க வேண்டும். இதேபோல் பிற விளை பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையும் உயா்த்தப்பட வேண்டும். அப்போது தான் நலிவடைந்து வரும் விவசாயத் தொழிலை மீட்பதோடு, விவசாயிகளும் லாபம் ஈட்ட முடியும் என்றாா்.
கடந்த 10 ஆண்டுகளில் நிா்ணயிக்கப்பட்ட நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை கிலோவுக்கு (அடைப்பு குறிக்குள் உயா்த்தப்பட்ட விலை):
2010 - 11 - ரூ.10
2011 - 12 - ரூ.10.80 (80 காசுகள்)
2012 - 13 - ரூ.12.50 (170 காசுகள்)
2013 - 14 - ரூ.13.10 (60 காசுகள்)
2014 - 15 - ரூ.13.60 (50 காசுகள்)
2015 - 16 - ரூ.14.10 (50 காசுகள்)
2016 - 17 - ரூ.14.70 (60 காசுகள்)
2017 - 18 - ரூ.15.50 (80 காசுகள்)
2018 - 19 - ரூ.17.50 (200 காசுகள்)
2019 - 20 - ரூ.18.15 (75 காசுகள்)
2020 - 21 - ரூ.18.68 (53 காசுகள்)