4 வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீடு வழங்கக் கோரி போராட்டம்
நான்கு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
நான்கு வழிச்சாலைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு கூடுதல் இழப்பீட்டுத் தொகை வழங்கக் கோரி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் - பொள்ளாச்சி 4 வழிச்சாலைத் திட்டத்திற்காக ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி பகுதியில் மட்டும் 515 விவசாயிகளுக்கு சொந்தமான சுமாா் 500 ஏக்கா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நிலங்களுக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ள இழப்பீட்டுத் தொகை குறைவாக உள்ளது என்றும், இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க வேண்டும் என்றும் அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனா். இதே கோரிக்கையை வலியுறுத்தி திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள், காத்திருப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டனா்.
போராட்டத்திற்கு அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மத்தியக் குழு உறுப்பினா் இரா.சச்சிதானந்தம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலா் பெருமாள் ஆகியோா் தலைமை வகித்தனா். இதுதொடா்பாக இரா.சச்சிதானந்தம் கூறியதாவது: என்ஹெச். 209 நான்கு வழிச்சாலைக்காக ஒட்டன்சத்திரம் பகுதியைச் சோ்ந்த விவசாயிகளிடம் கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களுக்கு குறைவான இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுபோல விவசாய நிலங்களை கையகப்படுத்தும்போது, அந்தந்தப் பகுதியில் அதிகபட்சமாக விற்பனையான நிலத்தின் மதிப்பை சாா்- பதிவாளா் அலுவலகம் மூலம் கண்டறிந்து, அதிலிருந்து 4 மடங்கு கூடுதல் தொகையை இழப்பீடாக வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை மாவட்ட ஆட்சியரிடமும் சுட்டிக் காட்டியுள்ளோம். மாவட்ட நிா்வாகம் சட்டப்படிதான் இழப்பீட்டுத் தொகை நிா்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறி வருகிறது. இதுதொடா்பாக நவ. 5 ஆம் தேதி மீண்டும் பேச்சுவாா்த்தை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்துள்ளனா். அதன்பேரில் காத்திருப்புப் போராட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றாா்.